வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி பா.ம.க., வன்னியர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்


வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி பா.ம.க., வன்னியர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Jan 2021 2:14 AM IST (Updated: 30 Jan 2021 2:14 AM IST)
t-max-icont-min-icon

வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி பா.ம.க., வன்னியர் சங்கத்தினர் சார்பில் 38 மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

சென்னை,

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி பா.ம.க., வன்னியர் சங்கம் சார்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதி முதல் போராட்டம் நடந்துவருகிறது. அந்தவகையில், சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம், கிராம நிர்வாக அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம், நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகம் ஆகியவற்றில் கோரிக்கை மனு அளிக்கும் ஆர்ப்பாட்டங்கள் என 5 கட்டங்களாக போராட்டம் நடந்துமுடிந்த நிலையில், 6-வது கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். வடக்கு மண்டல இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, துணை பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், அமைப்புச் செயலாளர் மு.ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் அணி மாநிலச் செயலாளர் செஞ்சி செ.ரவி, துணைச்செயலாளர் ப.வெங்கடேசன், தேர்தல் பணிக்குழுச் செயலாளர் ஜி.வி.சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டம் முடிந்ததும் ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறியதாவது:-

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கேட்டுவந்த டாக்டர் ராமதாஸ், தற்போது அதிலிருந்து சற்று கீழேவந்து, உள்ஒதுக்கீடு வழங்க கேட்டிருக்கிறார். இதில் தமிழக அரசுக்கு எந்த சட்டச்சிக்கலும் இல்லை. எந்த சமுதாய மக்களுக்கும் பாதிப்பும் இல்லை. தமிழக அரசு உடனடியாக வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கவேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், எஸ்.சி., எஸ்.டி., ஓ.சி. பிரிவில் கேட்கவில்லை. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில்தான் உள்ஒதுக்கீடு கேட்கிறோம். பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இதில் எந்தச் சட்டச்சிக்கலும் இல்லை என்று தெரிவித்துவிட்டது. இதற்கு மேல் காலம்தாழ்த்தக்கூடாது. அதேபோல், டாக்டர் ராமதாஸ் இதற்கு கீழ் இறங்கிப்போகமாட்டார்.

இது தேர்தலுக்காக நடத்தும் போராட்டம் அல்ல. வன்னியர்களின் வாழ்வுக்காக நடத்தப்படும் போராட்டம். கூட்டணி பற்றி ராமதாஸ்தான் முடிவு எடுப்பார். பொதுக்குழு அந்த அதிகாரத்தை அவருக்கு கொடுத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நிர்வாகிகள் சிலர் சென்னை மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Next Story