மணிகண்டம் அருகே தாய் இறந்த துக்கத்தில் தூக்குப்போட்ட மகன்கள்; அண்ணன் சாவு; தம்பி உயிர் ஊசல்
மணிகண்டம் அருகே தாய் இறந்த துக்கத்தில் தூக்குப்போட்டுக்கொண்ட மகன்களில் அண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். தம்பி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மணிகண்டம் அருகே இந்திராநகரை சேர்ந்தவர் மூக்கன். இவரது மனைவி செல்லம்மாள் (வயது 44). இவர்களது மகன்கள் ராமசாமி என்ற குட்டி (20), சதீஷ் (18). இந்தநிலையில் செல்லம்மாள் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் இறந்துவிட்டார். தொடர்ந்து அன்று மாலை அவரது உடலை அவரது உறவினர்கள் அடக்கம் செய்தனர்.
தாய் இறந்ததால் ராமசாமியும், சதீசும் சோகத்தில் இருந்து வந்தனர். இந்தநிலையில், பாசத்துடன் இருந்த தாய் இறந்துவிட்டதால், இனி நாம் மட்டும் ஏன் வாழ வேண்டும் என்று முடிவு செய்த ராமசாமி, நேற்று தனது தாயின் சோலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தம்பியும் தற்கொலை முயற்சி
வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த சதீஷ், அண்ணன் தூக்கில் தொங்குவதை பார்த்து, அதிர்ச்சி அடைந்து அருகில் இருந்தவர்களிடம் கூறினார். அவர்கள் ராமசாமியை கீழே இறக்கி பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவரும், அவருடைய உறவினர்களும் ராமசாமி உடலை பார்த்து கதறி அழுது கொண்டிருந்தனர். அப்போது நமது தாயும், அண்ணனும் இறந்து விட்டனர். நாம் மட்டும் எதற்கு உயிரோடு இருக்க வேண்டும் என்று எண்ணி, அண்ணன் தூக்குப்போட்டுக்கொண்ட அதே சேலையில் அவரும் தூக்குப்போட்டுக்கொண்டார்.
உயிர் ஊசல்
இதை பார்த்த அவருடைய உறவினர்கள் சதீஷை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவலறிந்த மணிகண்டம் போலீசார் ராமசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் இறந்த துக்கம் தாளாமல் மகன்கள் தூக்குப்போட்டுக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story