பெண் என்ஜினீயரை கத்தியால் குத்திய வழக்கில் தேடப்பட்ட வாலிபர் தற்கொலை - மின்கம்பியில் தூக்கிட்ட நிலையில் பிணமாக மீட்பு
காதலிக்க மறுத்ததால் பெண் என்ஜினீயரை கத்தியால் குத்திய வழக்கில் தேடப்பட்ட வாலிபர் மின்கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
செங்குன்றம்,
சென்னை அடுத்த புழல் புத்தகரத்தை சேர்ந்த 22 வயதுடைய பெண் என்ஜினீயரிங் பட்டதாரி அம்பத்தூரில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வந்தார். இவரை ரெட்டேரி பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்த அதே பகுதியை சேர்ந்த சுதாகர் (வயது 26) என்ற வாலிபர் காதலித்து வந்த நிலையில், அவருடனான காதலை அப்பெண் முறித்து கொண்டதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சுதாகர் நேற்று முன்தினம் காலை அந்த என்ஜினீயர் பெண் வீட்டிற்கு சென்று தன்னை தொடர்ந்து காதலிக்குமாறும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இளம் பெண்ணின், வயிறு, கழுத்து, கை உள்ளிட்ட பகுதியில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்த பெண்ணை மீட்டு, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து புழல் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார், வழக்குப்பதிவு செய்து, கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய சுதாகரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாதவரம் அடுத்த வி.எஸ்.மணி நகர் அருகே மின்கம்பியில் வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு கிடப்பதாக மாதவரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டவர் காதலிக்க மறுத்ததால், கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற வாலிபர் சுதாகர் என்பது தெரிய வந்தது.
விசாரணையில், தான் காதலித்த பெண்ணை குத்தி விட்டோமே என்ற மனவிரக்தியில் வாழ விருப்பமில்லாமல் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story