பெரம்பலூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை நேரடியாக நடத்தக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


பெரம்பலூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை நேரடியாக நடத்தக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Jan 2021 11:28 AM IST (Updated: 30 Jan 2021 11:33 AM IST)
t-max-icont-min-icon

காணொலி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை நடத்தாமல், நேரடியாக நடத்தக்கோரி பெரம்பலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

கொரோனா ஊரடங்கினால் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை ஆகிய வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களில் காணொலி காட்சி மூலம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கினார். விவசாயிகள் தங்களது குறைகளை காணொலி காட்சி மூலம் கலெக்டரிடம் தெரிவித்தனர். பெரம்பலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த விவசாயிகள் திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அவர்கள், கொரோனாவை காரணம் காட்டி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை காணொலி காட்சி மூலம் நடத்தாமல், மற்ற மாவட்டங்களை போல் பெரம்பலூரிலும் கலெக்டர் தலைமையில் நேரடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் காணொலி காட்சி மூலம் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு கலெக்டரிடம் தங்களது குறைகளை தெரிவித்தனர்.

இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்லத்துரை பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் புயல் மற்றும் மழையினால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம், பருத்தி, சின்ன வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணமாக விவசாயிகளுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். அரசலூர் ஏரி பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக உடைந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, ஏரி உடைப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணத்தை மாவட்ட நிர்வாகம் உடனடியாக வழங்க வேண்டும், என்றார்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் பேசுகையில், ஆலத்தூர் தாலுகா கொட்டரை நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அந்த நீர் தேக்கத்திற்கு நிலம் வழங்கி நஷ்ட ஈடு பெறாத விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு தொகை வழங்க வேண்டும். கோவில் நிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு அரசின் உதவி திட்டங்கள் பெற, அடங்கல், சிட்டா ஆகிய நகல்களை வழங்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும், என்றார்.

மற்ற வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களில் இருந்து விவசாயிகள் பேசுகையில், மாவட்டத்தில் ஏரி, குளத்தில் உள்ள வரத்து வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். துங்கபுரம் பகுதியில் மின்மாற்றியை மாற்றி அமைத்து மும்முனை மின்சாரம் வழங்கவும், பெரம்பலூர் சர்க்கரை ஆலை மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய அடுத்த நிலுவை தொகையினை விரைந்து வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

இதையடுத்து கலெக்டர் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் புயல் மற்றும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கும் கணக்கெடுப்பு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். அரசலூரில் உள்ள விவசாய நிலங்களை கணக்கெடுப்பு செய்து வருவாய் பேரிடர் மேலாளர் மூலம் நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேரில் நடத்தப்படும், என்றார்.

Next Story