நச்சலூர் பகுதியில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்
நச்சலூர் பகுதியில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், மகசூல் குறைந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
நச்சலூர்:
அறுவடை பணிகள் தீவிரம்
நச்சலூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான நெய்தலூர், நெய்தலூர் காலனி, கட்டாணி மேடு, சேப்ளாப்பட்டி, முதலைப்பட்டி, சூரியனூர், நங்கவரம், பொய்யாமணி, இனுங்கூர் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டது.
நெற்பயிர்கள் நன்றாக வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தொடர்ந்து சில நாட்களாக பெய்த மழையால் பயிர்கள் சாய்ந்தன. பல இடங்களில் பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால், ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்டிருந்த பி.பி.டி., ஆந்திரா பொன்னி, கர்நாடக பொன்னி ஆகிய நெல் ரகங்கள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட நெல்வயல்களை வேளாண்மை துறை அதிகாரிகள் கணக்கீடு செய்தனர். இந்தநிலையில் மிஞ்சிய நெற்கதிர்களை எந்திரம் மற்றும் கூலி ஆட்கள் மூலம் அறுவடை செய்யும் பணி இப்பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மகசூல் பாதிப்பு
இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் சிலர் கூறுகையில், மழையின் காரணமாக பெரும்பாலான நெல் வயல்கள் நாசமடைந்து விட்டன. தற்போது நன்றாக வெயில் அடிப்பதால் எஞ்சிய நெற்கதிர்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால், தொடர் மழையின் காரணமாக மகசூல் பாதியாக குறைந்து விட்டது.
வழக்கமாக ஏக்கருக்கு 40 முதல் 45 மூட்டைகள் வரை நெல் மகசூல் கிடைக்கும். தற்போது அறுவடை செய்ததில் ஏக்கருக்கு 20 முதல் 25 மூட்டைகள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனால், செலவு செய்த முதலீட்டை கூட எடுக்க முடியவில்லை. இதனை, அரசு கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கவலையுடன் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story