வடமாநில கொள்ளையன் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு


வடமாநில கொள்ளையன் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 30 Jan 2021 12:35 PM IST (Updated: 30 Jan 2021 12:35 PM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வடமாநில கொள்ளையன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சீர்காழி:
சீர்காழி அருகே என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வடமாநில கொள்ளையன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கொலை-கொள்ளை 
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரெயில்வே ரோட்டில் வசித்து வருபவர் தன்ராஜ் சவுத்ரி. இவர், சீர்காழி அருகே உள்ள பூம்புகார் தர்மபுரம் பகுதியில் நகைக்கடை அடகுக்கடை வைத்து நடத்தி வருகிறார். இதுதவிர நகை மொத்த வியாபாரமும் செய்து வருகிறார்.
கடந்த 27-ந் தேதி காலை இவரது வீட்டுக்குள் நுழைந்த வடமாநில கொள்ளையர்கள் 3 பேர் தன்ராஜ் சவுத்ரியின் மனைவி மற்றும் மகனை கழுத்தை அறுத்து கொன்று விட்டு வீட்டில் இருந்த நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றனர். காரில் தப்பித்து சென்ற கொள்ளையர்கள், கொள்ளிடம் அருகில் உள்ள ஒரு சவுக்கு தோப்பில் பதுங்கி இருக்கும் தகவல் அறிந்து அவர்களை பிடிப்பதற்காக போலீசார் சென்றனர். 
கொள்ளையன் சுட்டுக்கொலை 
அப்போது கொள்ளையர்களில் ஒருவன் தான் வைத்து இருந்த துப்பாக்கியால் சுட முயன்றபோது போலீசார் அந்த கொள்ளையனை நோக்கி திருப்பி சுட்டனர். இதில் மஹிபால்(வயது 28) என்ற கொள்ளையன் போலீசாரின் என்கவுண்ட்டருக்கு இரையானான். 
போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட மஹிபால் உடல் சீர்காழி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. நேற்று சீர்காழி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) அமிர்தம் முன்னிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் நவீன், சிவக்குமார் தலைமையிலான மருத்துவக்குழுவினர் வீடியோ பதிவுடன் பிரேத பரிசோதனை செய்தனர்.
உறவினர்களிடம் ஒப்படைப்பு
பிரேத பரிசோதனைக்கு பின்னர் மஹிபால் உடல் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மஹிபால் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள் முறையான ஆவணங்களை பெற்றுக்கொண்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் இருந்து சென்னை விமான நிலையம் வரை ஆம்புலன்ஸ் மூலமாகவும், பின்னர் சென்னையில் இருந்து ராஜஸ்தான் வரை விமானம் மூலமாகவும் உடலை கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.

Next Story