குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 30 Jan 2021 10:09 PM IST (Updated: 30 Jan 2021 10:12 PM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பழனி,

பழனி அருகே கோதைமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ஜவகர்நகரில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கடந்த சில மாதங்களாகவே சரிவர குடிநீர் வழங்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் தவித்து வந்தனர். 

இந்தநிலையில் கடந்த 2 வாரங்களாக ஜவகர்நகரில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதன்காரணமாக அப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கோதைமங்கலம் ஊராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை ஜவகர்நகரில் உள்ள பழனி-புதுதாராபுரம் சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த பழனி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் வினியோகம் செய்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என்று பொதுமக்கள் கூறினர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட சிலரை போலீசார் தங்களது வாகனத்தில் ஏற்றி செல்ல முயன்றனர். இதையடுத்து அவர்களை விடுவிக்கக்கோரி பொதுமக்கள், போலீஸ் வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதற்கிடையே அங்கு வந்த ஊராட்சி அதிகாரிகள், ஜவகர்நகர் பகுதியில் உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்களது மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மறியல் காரணமாக பழனி-புதுதாராபுரம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

Next Story