தூத்துக்குடியில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வழக்கம் போல் நடைபெறும் - கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்


தூத்துக்குடியில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வழக்கம் போல் நடைபெறும் - கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
x
தினத்தந்தி 30 Jan 2021 4:45 PM GMT (Updated: 30 Jan 2021 4:47 PM GMT)

தூத்துக்குடியில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வழக்கம் போல் நடைபெறும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனித நேய வார விழா கொண்டாடப்பட்டது. ஒரு வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியின் நிறைவு விழாவுக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பரிமளா தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் (பயிற்சி) பிரித்திவிராஜ் முன்னிலை வகித்தார்.

மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.  விழாவில் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை சூப்பிரண்டு பழனிகுமார், தலைமை ஆசிரியர்கள் சங்கரகுமார், வரதராஜன், தூத்துக்குடி ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் அழகர், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதற்கிடையே மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் காணொலி காட்சி மூலமாக எனது தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள மக்களின் நலனை கருத்தில் கொண்டு நாளை (திங்கட்கிழமை) முதல் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கலெக்டர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஏற்கனவே இருந்த நடைமுறை அடிப்படையில் வழக்கம் போல் நடைபெறும். இதில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முக கவசம் அணிந்தும் கலந்து கொள்ள வேண்டும்.

நாளை முதல் இனிவரும் நாட்கள்களில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும் விண்ணப்பதாரர்கள் தவறாமல் தங்களது ஆதார் அட்டை மற்றும் செல்போனுடன் வந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story