பண்ருட்டி அருகே டாக்டர் வீட்டில் பித்தளை பாத்திரங்கள் திருடிய 2 போ் கைது
பண்ருட்டி அருகே டாக்டர் வீட்டில் பித்தளை பாத்திரங்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி,
பண்ருட்டி அருகே உள்ள சின்ன பகண்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன்(வயது 42). இவர் கடலூர் அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். முத்துக்குமரனுக்கு புதுச்சேரி அரியாங்குப்பத்தில் வீடு உள்ளதால், இவரது குடும்பத்தினர் சின்ன பகண்டையில் உள்ள வீட்டை பூட்டி விட்டு அரியாங்குப்பத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி காலையில் சின்னபகண்டையில் உள்ள முத்துக்குமரன் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி முத்துக்குமரனுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் அவர் பதறியடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பித்தளை பொருட்கள் அனைத்தும் திருடு போயிருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் முன்பக்க கதவை உடைத்து வீட்டில் இருந்த பித்தளை பாத்திரங்களை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.12 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த், போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர்.
விசாரணையில் டாக்டர் வீட்டில் திருடியது, பட்டாம்பாக்கம் பி.என். பாளையத்தை சேர்ந்த முருகானந்தம் மகன் முகிலன்(வயது 21), ஜெயபால் மகன் ஜெயகணேஷ்(23) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் இருவரும் டாக்டர் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து முகிலன், ஜெயகணேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story