வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம்
வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
வடலூர்,
வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று ஜோதி தரிசனம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு 150-வது ஜோதி தரிசன விழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி வள்ளலார் அவதரித்த மருதூர் இல்லத்திலும், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி இல்லத்திலும், வடலூர் தருமசாலை மற்றும் வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களிலும் கொடியேற்றப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கடந்த 28-ந்தேதி தைப்பூசத்தையொட்டி சத்திய ஞானசபையில் 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதியை தரிசனம் செய்தனர்.
திருஅறை தரிசனம்
ஜோதி தரிசனம் முடிந்த பின்னர் வடலூர் அடுத்த மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்தி வளாக திருமாளிகையில் திருஅறை தரிசனம் நடைபெறுவது வழக்கம். இங்குள்ள ஒரு அறையின் உள்ளே சென்ற வள்ளலார் அங்கு உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு சித்திபெற்றார். அந்த அறைக்கு தீபம் காண்பிக்கப்படுவதே திருஅறை தரிசனம் என்பதாகும். அதன்படி மேட்டுக்குப்பத்தில் நேற்று திருஅறை தரிசனம் நடைபெற்றது. முன்னதாக வடலூர் சத்திய ஞானசபையில் வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டி(பேழை) மற்றும் உருவப்படம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டது.
வரவேற்பு
பின்னர் அலங்கரிக்கப்பட்ட அந்த பெட்டியை பல்லக்கில் வைத்து, வடலூர் சத்தியஞானசபையில் இருந்து மேட்டுக்குப்பத்தில் உள்ள திருமாளிகைக்கு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. அந்த பல்லக்கை கருங்குழியை சேர்ந்த மீனவ சமூகத்தினர் தங்களது தோளில் சுமந்து சென்றனர்.
அப்போது வழியில் பார்வதிபுரம் கிராம மக்கள் மற்றும் செங்கால் ஓடையில் நைனார்குப்பத்தை சேர்ந்தவர்களும் பழங்கள், பூக்கள் வைத்து வரவேற்றனர். பின்னர் கருங்குழியில் வள்ளலார் வழிபட்ட விநாயகர் கோவில், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி ரெட்டியார் இல்லம், வள்ளலார் வழிபட்ட லட்சுமி நாராயண பெருமாள் கோவில், அவர் நீராடிய தீஞ்சுவை நீரோடை வழியாக ஊர்வலம் சென்றது. அப்போது கருங்குழி செம்புலிங்க குடும்பத்தினர் சார்பில் சீர்வரிசை பொருட்கள் வைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
வழிபாடு
இதையடுத்து மேட்டுக்குப்பத்தில் திருஅறை உள்ள சித்திவளாக திருமாளிகைக்கு ஊர்வலம் வந்தடைந்தது. அப்போது அங்கு கிராம மக்கள் பழங்கள் மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுத்து வரவேற்று வழிபட்டனர். இதையடுத்து வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை முன் பெட்டியை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
அதன்பின்னர் வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை தரிசனம் நடைபெற்றது. வள்ளலார் சித்தி பெற்ற திருஅறையில் மதியம் 12 மணிக்கு ஞானசபை பூசகர் தீபம் காண்பிக்க திருஅறை தரிசனம் தொடங்கியது. அப்போது அந்த அறையின் முன்பாக திரண்டிருந்த திரளான பக்தர்கள் அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி என்கிற மகா மந்திரத்தை உச்சரித்து வழிபட்டனர்.
அன்னதானம்
இதையடுத்து பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக சென்று திருஅறையை தரிசனம் செய்தனர். மாலை 6 மணி வரை இந்த தரிசனம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாக அதிகாரி சரவணன் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
திருஅறை தரிசனத்தையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story