மீனவரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் 4 பேர் கைது; காதலுக்கு இடையூறாக இருந்ததால் பழிதீர்த்ததாக வாக்குமூலம்
மீனவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். காதலுக்கு இடையூறாக இருந்ததால் கொலை நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மீனவர் கொலை
சென்னை திருவொற்றியூர், அப்பர் சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் நாராயணன். மீனவரான இவர், நேற்று முன்தினம் காலை சிங்கார வேலர் நகர், சுரங்கப்பாதை இறால் எடை மேடை அருகே 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து காசிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், எண்ணூர் விரைவு சாலையில் ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் மடக்கி விசாரித்தனர்.அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசவே, சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் கிடிக்கிப்பிடி விசாரணை செய்ததில், மீனவர் நாராயணனை கொலை செய்து தப்பி வந்தபோது பிடிபட்டது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவர்களை காசிமேடு போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில், அவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- காசிமேடு, அத்திப்பட்டு, குடிசை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் நாராயணனுக்கு கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது.
காதலுக்கு இடையூறு
அவரது கள்ளக்காதலிக்கு திருமண வயதில் பெண் ஒருவர் உள்ளார். அவரை புதுவண்ணாரப்பேட்டை பள்ளப்பகுதியைச் சேர்ந்த எல்லப்பன் (வயது 24) என்பவர் காதலித்து வந்ததாக தெரிகிறது. ஆனால் அந்த காதலுக்கு நாராயணன் இடையூறாக இருந்துள்ளார்.
மேலும் கடந்த வாரம் எல்லப்பனை அழைத்து கண்டித்த நாராயணன் அவரை அடித்து உதைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த எல்லப்பன் நேற்று முன்தினம் காலை தன் நண்பர்களான சரவணன் (22), சூர்யா (22), கேரளா சூர்யா (21) ஆகிய 3 பேருடன் நாராயணனை தனியாக பேச வேண்டும் என்று அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அவருக்கு மது வாங்கி கொடுத்து போதை தலைக்கேறியதும் நாராயணனை 4 பேரும் சேர்ந்து சரமாரியாக வெட்டி கொலை செய்து பழிதீர்த்துள்ளனர்.
அதன் பின்னர், எண்ணூர் சுனாமி குடியிருப்பு சென்று ரத்தக்கரை படிந்த தங்களது உடைகளை கழற்றி போட்டு விட்டு வேறு உடை அணிந்து கொண்டு தப்பியபோது போலீசில் பிடிபட்டதாக தெரிவித்தனர்.
Related Tags :
Next Story