கூட்டுறவு வங்கியில் வாங்கிய நகை கடன்கள் தள்ளுபடி-மு.க.ஸ்டாலின் பேச்சு
கூட்டுறவு வங்கியில் வாங்கிய விவசாய கடன்கள், நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று பனப்பாக்கத்தில் நடந்த தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
நெமிலி
தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் கூட்டுறவு வங்கியில் வாங்கிய விவசாய கடன்கள், நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று பனப்பாக்கத்தில் நடந்த தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தேர்தல் பிரசார நிகழ்ச்சி
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை அடுத்த பனப்பாக்கத்தில் "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற தலைப்பில் தி.மு.க.வின் தேர்தல் பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பொதுமக்கள் மனு கொடுப்பதற்காக சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஏராளமானோர் மனுக்களை கொடுத்தனர். அவர்களுக்கு ரசீதுகள் வழங்கப்பட்டன. மனுக்கள் இருந்த பெட்டிக்கு மு.க.ஸ்டாலின் ‘சீல்’ வைத்தார்.
பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. முன்னிைல வகித்தார். மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆர்.காந்தி எம்.எல்.ஏ. வரவேற்றார்.
தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தற்போது பெறப்படும் கோரிக்கை மனுக்கள் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் 100 நாட்களில் 99 சதவீத கோரிக்கைகளாவது நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், தகுதியான அனைவருக்கும் கட்சி பாகுபாடு இல்லாமல் முதியோர் ஓய்வு ஊதியம், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
ஊழல் நிறைந்த ஆட்சி
தற்போது அ.தி.மு.க. அரசு ஊழல் நிறைந்த ஆட்சியாக உள்ளது. அனைத்து அமைச்சர்களும் ஊழலில் சிக்கியுள்ளனர். பல்வேறு இடங்களில் அணைகளை கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆட்சி அமைந்தவுடன் தமிழகத்தில் எங்கெல்லாம் அணைகளை கட்ட வேண்டுமோ அனைத்து இடங்களிலும் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
அ.தி.மு.க. அரசு புதிய திட்டங்களை 110 விதியின் கீழ் மட்டுமே அறிவித்து அறிக்கையாகவே வைத்துள்ளது. ஆனால் ஒரு திட்டத்தை கூட அவர்கள் முழுமையாக நிறைவேற்றவில்லை. உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சி துறை அமைச்சராக இல்லை. அவர் ஊழல்துறை அமைச்சராக இருக்கிறார். உள்ளாட்சி துறை கொரோனா காலங்களில் கொள்ளையடித்ததுதான் கொடுமை.
சோளிங்கர், வாலாஜா அரசு மருத்துவமணை சரியாக செயல்படவில்லை, போதுமான உபகரணங்கள் இல்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் என தெரியவந்துள்ளது. அமைச்சர்களுக்கு இைணயாக ஊழல் செய்பவர் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி. ஊழலில் ஈடுபடுபவர்கள் சிறைக்கு செல்வது நிச்சயம்.
கூட்டுறவு வங்கியில் வாங்கிய...
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்காக அந்த ஆலை தொடங்க கூடாது என தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் ஆலையை தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புதிய கல்லூரிகள் உருவாக்கப்பட்டு முறையாக பணியிடங்கள் நிரப்பப்படும். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கூட்டுறவு வங்கியில் வாங்கிய விவசாய கடன்கள் மற்றும் நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். மேலும் கல்விக்கடன் ரத்து செய்யப்படும்.
தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னேறிய மாநிலமாக உருவாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
Related Tags :
Next Story