சிறுகனூர் அருகே லாரியின் பின்னால் கார் மோதிய விபத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க இணை இயக்குனர் பலி
சிறுகனூர் அருகே லாரியின் பின்னால் கார் மோதிய விபத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க இணை இயக்குனர் பலியானார்.
கோவை காந்திபுரத்தை சேர்ந்தவர் ஸ்டான்லி மைக்கேல் (வயது 48). டாக்டரான இவர், சென்னை எழும்பூரில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் இணை இயக்குனராக பணியாற்றி வந்தார். நேற்று அதிகாலை கோவையில் இருந்து தனது காரில் அவர் சென்னைக்கு புறப்பட்டார்.
கார், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், சமயபுரம் அடுத்த சிறுகனூர் அருகே நெடுங்கூர் பகுதியில் வந்தது. அப்போது தூத்துக்குடியில் இருந்து விஜயவாடாவுக்கு உப்பு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி, காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்தது.
இந்தநிலையில் டாக்டர் ஸ்டான்லி மைக்கேல் ஓட்டிவந்த கார் லாரியின் பின்னால் திடீரென மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. டாக்டர் ஸ்டான்லி மைக்கேல் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்த சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் டாக்டரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த சத்யநாராயணன் (44) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story