அவினாசி அருகே செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியல்


அவினாசி அருகே செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 30 Jan 2021 11:33 PM GMT (Updated: 30 Jan 2021 11:33 PM GMT)

அவினாசி அருகே செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியல் செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலைமறியல் 
அவினாசியை அடுத்த பழங்கரை ஊராட்சி பகுதியில் உள்ள ஆயிக்கவுண்டம்பாளையம் செந்தூர் கார்டன் அருகே தனியார் நிறுவன செல்போன் கோபுரம் அமைப்பதற்கு குழி தோண்டப்பட்டது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று காலை 9.30 மணிக்கு ஆயிக்கவுண்டம்பாளையத்திலிருந்து அவினாசி செல்லும் ரோட்டில் அமர்ந்து திடீரென்று சாலைமறியலில் ஈடுபட்டனர். 

இந்த போராட்டம் குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
ஆயிக்கவுண்டம்பாளையம், நல்லி கவுண்டம்பாளையம், செந்தூர் நகர், ருக்மா கார்டன், எ.பி.எஸ்.கார்டன், அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் 1100 குடும்பத்தினர் உள்ளனர். இப்பகுதியின் மையத்தில் செல்போன் கோபுரம் அமைத்தால் அதன் கதிர்வீச்சால் குடியிருப்பவர்களுக்கு  நோய்கள் ஏற்படும். பொது மக்கள் நலன் கருதி இப்பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர். 

பேச்சுவார்த்தை
  இதுபற்றி தகவல் அறிந்ததும் அவினாசி போலீசார், கிராம நிர்வாக அலுவலர் ராயப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் பிரச்சினைக்குரிய இடத்தில் செல்போன் கோபுரம் அமைப்பதை தடுத்து நிறுத்துவதாகவும் மேற்கொண்டு அங்கு எவ்வித பணிகளும் நடக்க அனுமதிப்பதில்லை என்றும் உறுதி கூறிய பின்னர் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story