கடல் தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம் அறிவிப்பு


கடல் தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம் அறிவிப்பு
x
தினத்தந்தி 31 Jan 2021 1:29 AM GMT (Updated: 31 Jan 2021 1:29 AM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி கடல் தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி  கடல் தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இரட்டைமடி வலை
ராமநாதபுரத்தில் சி.ஐ.டி.யூ கடல்தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட இரட்டைமடி வலை மீன்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக ராமேசுவரத்தில் உள்ள 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 500 படகுகள் இரட்டை மடி மீன்பிடிப்பில் ஈடுபடுகின்றன. இந்த படகுகள் அனைத்தும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, கேரளா போன்ற பகுதிகளில் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடுத்தப்பட்ட படகுகள் ஆகும். ரூ.1 கோடி மதிப்பிலான இந்த படகுகள் 2-ம் நிலையில் ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை வாங்கி வந்து இரட்டை மடி மீன்பிடிப்பிற்கு பயன்படுத்துகின்றன. 
கடல் வளம்
உலகநாடுகள் அனைத்தும் கடல்வளத்தையும் மீன்வளத்தையும் பாதுகாக்கும் வகையில் சட்டங்களை கடுமையாக்கி வருகின்றன. ஆனால், தமிழகத்தில் அதற்கு மாறாக கடல்வளத்தை அழிக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.  இதனால் கடல்வளம், மீன்வளம் முற்றிலும் அழிந்து வருகிறது. இது இலங்கை கடல் பகுதியிலும் தொடர்வதால் அங்குள்ள தமிழ் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால் இலங்கை கடற்படை நம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி படகுகளை பறிமுதல் செய்கிறது. 
எனவே இந்த சட்ட விரோத மீன்பிடிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து கடற்கரையில் இருந்து 5 கடல் மைல் தொலைவிற்குள் விசைப்படகுகள் மீன்பிடிக்க கூடாது என்ற அரசின் சட்டத்தினை கடுமையாக அமல்படுத்த வேண்டும். விசைப்படகுகள் தடைசெய்யப்பட்ட இரட்டைமடி மீன்பிடிப்பில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும். 
குறைதீர்க்கும் கூட்டம்
இதனை மீன்வளத்துறை ரோந்து சுற்றி கண்காணிக்கும் வகையில் 4 படகுகளை வழங்க வேண்டும். மன்னார் வளைகுடா தீவுபகுதியில் பாரம்பரிய மீன்பிடி உரிமைக்கும், மீனவ பெண்கள் கடல்பாசி சேகரிக்கவும் தடை ஏற்படுத்தும் வகையில் வனத்துறை மேற்கொண்டுவரும் சுற்றுலா படகு சவாரி திட்டத்தினை கைவிட வேண்டும். மீனவர் குறைதீர் கூட்டத்தினை மாதந்தோறும் முறையாக நடத்த வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை என 5 மாவட்ட மீனவர்கள் மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி மிதவைகளுடன் செயல்படுத்தாமல் உள்ள 1983 தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தியும், சங்கு ஊதி சவப்பெட்டியுடன் பிப்ரவரி முதல்வாரத்தில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story