மர்மமான முறையில் இறந்து கிடந்த 5 மயில்கள்
வேதாரண்யம் அருகே மர்மமான முறையில் 5 மயில்கள் இறந்து கிடந்தன.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே மர்மமான முறையில் 5 மயில்கள் இறந்து கிடந்தன. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 மயில்கள் மர்ம சாவு
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் வனவிலங்கு சரணாலயம் மற்றும் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளன. இந்த சரணாலயங்களில் மான், முயல், குரங்கு, காட்டுபன்றி உள்ளிட்ட விலங்குகளும், மயில் மற்றும் பல்வேறு உள்நாட்டு பறவைகளும் உள்ளன.
பறவைகள் சரணாலயத்துக்கு ஆண்டு தோறும் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு வகையான பறவைகள் வந்து செல்கின்றன.மேலும் சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான மயில்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நிலையில் நேற்று நாலுவேதபதி உலகநாதன் தெரு பழைய மாடி கடை அருகே சாலையோரத்தில் 5 பெண் மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.
வனத்துறையினர் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த கோடியக்கரை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த 5 மயில்களையும் கைப்பற்றி கோடியக்கரை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மயில்களை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். பின்னர் 5 மயில்களையும் காட்டுப்பகுதியில் புதைத்தனர்.
இந்த மயில்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனவா? அல்லது யாராவது விஷம் வைத்து கொன்றுள்ளனரா? என கோடியக்கரை வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப காலமாக வேதாரண்யம் பகுதியில் தொடர்ந்து மயில் இறந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story