காங்கேயத்தில் காடை பண்ணை சூப்பர்வைசர் காரில் கடத்தல்; 2 பேர் கைது


காங்கேயத்தில் காடை பண்ணை சூப்பர்வைசர் காரில் கடத்தல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 31 Jan 2021 7:49 AM IST (Updated: 31 Jan 2021 7:57 AM IST)
t-max-icont-min-icon

காங்கேயத்தில் காடை பண்ணை சூப்பர்வைசரை காரில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

காங்கேயம்,

காங்கேயத்தில் காடை பண்ணை சூப்பர்வைசரை காரில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.  இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், குமாரநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சமீர் (வயது29). இவர் காங்கேயம் அருகே உள்ள பகவதிபாளையம் பகுதியிலும், நாமக்கல் மாவட்டம் பாலப்பட்டியிலும் காடைப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார்.  காடைப்பண்ணைக்கு தேவையான தீவனங்களை கடந்த 2 வருடங்களாக பல்லடத்தை சேர்ந்த சேக் கனீப் (50) என்பவரிடத்தில் வாங்கி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 1 வருடமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக சேக் கனீப்பிடம் தீவனம் வாங்கிய தொகை ரூ.29 லட்சத்து 25 ஆயிரம் கொடுக்கவேண்டி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சேக் கனீப், சில நபர்களுடன் கடந்த 27 -ந் தேதி காலை 7 மணிக்கு சமீரின் காடைப்பண்ணைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வேலை செய்யும் சூப்பர்வைசர் சாணுரகுமானை காரில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. சாணுரகுமான் கடத்தி செல்லப்படுவதை பண்ணையில் வேலைசெய்பவர்கள் பார்த்ததாகவும், அவர்கள் கேரளாவில் இருந்த சமீருக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து கேரளாவில் இருந்து காங்கேயத்திற்கு வந்து போலீஸ் நிலையத்தில் சமீர் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தப்பட்ட சூப்பர்வைசர் சாணுரகுமானையும், அவரை கடத்திச்சென்ற சேக் கனீப்பை தேடிவந்தனர்.

இந்த நிலையில் சாணுரகுமானை மதுரைக்கு கடத்தி சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் மதுரை சென்று, அங்கு இருந்த சாணுரகுமானை மீட்டனர். பின்னர் சாணுரகுமானை கடத்தி சென்றதாக சேக் கனீப் மற்றும் அவருடைய நண்பரான தூத்துக்குடி என்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த அர்ஜூனன் (60) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.  பின்னர் கைதுசெய்யப்பட்ட இருவரையும் காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story