காட்டு யானை தாக்கி கூட்டுறவு சங்க முன்னாள் செயலாளர் பலி


சம்பத்குமார்
x
சம்பத்குமார்
தினத்தந்தி 31 Jan 2021 11:07 AM IST (Updated: 31 Jan 2021 11:08 AM IST)
t-max-icont-min-icon

சிறுமுகை அருகே காட்டு யானை தாக்கியதில் கூட்டுறவு சங்க முன்னாள் செயலாளர் பரிதாபமாக இறந்தார்.

மேட்டுப்பாளையம்

சிறுமுகை அருகே காட்டு யானை தாக்கியதில் கூட்டுறவு சங்க முன்னாள் செயலாளர் பரிதாபமாக இறந்தார்.

கூட்டுறவு சங்க முன்னாள் செயலாளர்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை அடுத்துள்ள லிங்காபுரத்தை சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது 59). விவசாயியான இவர் லிங்காபுரம் கூட்டுறவு சங்க  முன்னாள் செயலாளர் ஆவார். இவருக்கு சிவப்பிரியா (45) என்ற மனைவியும், நிவாசன் (23) என்ற மகனும் உள்ளனர்.

சம்பத்குமாருக்கு காந்தவயல் கோபால் தோட்டம் அருகே சொந்தமாக நிலம் உள்ளது. இந்த நிலையில் வழக்கம்போல் இவர் நேற்று காலை வீட்டில் இருந்து தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் தோட்டத்தில் விவசாய பணிகளை முடித்துவிட்டு, மாலையில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.

காட்டு யானை தாக்கி பலி

காந்தையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியதால் லிங்காபுரம் சோதனைச்சாவடி அருகே காந்தவயலில் இருந்து லிங்காபுரத்திற்கு வனப்பகுதி வழியாக மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 வன விலங்குகள் நடமாட்டம் உள்ள இந்த பாதையில் சம்பத்குமார் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானை அவரை தாக்கி விட்டு வனப்பகுதிக்குள் சென்றது. இதில் சம்பத்குமார் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமுகை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சம்பத்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

பொதுமக்கள் அச்சம்

சிறுமுகை வனச்சரக அலுவலர் செந்தில்குமார் அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைக்கப் பெற்றதும் ஓ.கே. சின்னராஜ் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் காட்டு யானை தாக்கி இறந்த சம்பத்குமாரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர்.

இந்த சம்பவம் குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாலை நேரத்தில் காட்டு யானை தாக்கி கூட்டுறவு சங்க முன்னாள் செயலாளர் இறந்த சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story