அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் வழங்கப்படும்-அமைச்சர் செங்கோட்டையன்


சிவகங்கை அடுத்த சக்கந்தியில் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்
x
சிவகங்கை அடுத்த சக்கந்தியில் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்
தினத்தந்தி 31 Jan 2021 11:20 AM IST (Updated: 31 Jan 2021 11:21 AM IST)
t-max-icont-min-icon

வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷூ, சாக்‌ஸ் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

சிவகங்கை,

வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷூ, சாக்‌ஸ் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

திறப்பு விழா

சிவகங்கையை அடுத்த சக்கந்தியில் தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலை பள்ளி திறப்பு விழா மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடந்தது. கதர் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். முதன்மை கல்வி அதிகாரி பாலுமுத்து வரவேற்று பேசினார்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் புதிய தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளியை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

 முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பள்ளி குழந்தைகளுக்கு விலையில்லா சைக்கிள், மடிக்கணினி உள்ளிட்ட 14 வகையான பொருட்களை வழங்கினார். தமிழகத்தில் இதுவரை 53 லட்சத்து 17 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணிணி வழங்கப்பட்டுள்ளது.

ஷூ, சாக்ஸ்

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஹைடெக் கம்ப்யூட்டர் லேப் அமைக்க ரூ.519 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் 54 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கி உள்ளோம்.
இங்கு தரம் உயர்த்தப்பட்ட இந்த மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட ரூ.2 கோடியே 18 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

மாணவர்கள் பெற்றோர்களை நேசிக்க வேண்டும். ஒழுக்கம், மனித நேயம், தேசபக்தியுடன், கல்வி கற்க வேண்டும். வருகிற ஆண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷூ, மற்றும் சாக்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் கருணாகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்.மணி பாஸ்கரன், இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, யூனியன் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், துணைத்தலைவர் கேசவன், ஊராட்சி மன்ற தலைவர் கோமதி மணிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கல்வி அதிகாரி அமுதா நன்றி கூறினார்.

பேட்டி

அதன்பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-
வெயிட்டேஜ் மதிப்பெண் பெற்ற ஆசிரியர்கள் நீதிமன்றத்திற்கு சென்று இருக்கிறார்கள். தற்போது ஆசிரியர் தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது அதிகரித்து விட்டது. எனவே இது குறித்து அரசை அணுகி பேச்சுவார்த்தை நடத்தினாலே அதற்கு தீர்வு காண வழிவகை செய்வோம். 9-ம் வகுப்புக்கு கீழ் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி திறப்பு குறித்து கல்வியாளர்களுடன் ஆலோசித்து வருகிறோம். ஏற்கனவே கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளியை திறந்ததால் மாணவர்கள் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அது போல நிலைமை வந்து விடக்கூடாது. 

மாணவர்கள் நலனில் மிகுந்த அக்கறை எடுத்து கொண்டு செயல்பட்டு வருகிறோம். கல்வியாளர்களுடன் ஆலோசனை முடிந்த பிறகு முதல்-அமைச்சர் இது குறித்து அறிவிப்பார்.
 ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இவ்வாறு அவர் கூறினார்.

Next Story