சிவகிரியில் மயார் பூஜையில் வைக்கப்பட்ட ஒரு கிலோ நாட்டு சர்க்கரை ரூ.1¼ லட்சத்துக்கு ஏலம்


சிவகிரியில் மயார் பூஜையில் வைக்கப்பட்ட  ஒரு கிலோ நாட்டு சர்க்கரை ரூ.1¼ லட்சத்துக்கு ஏலம்
x
தினத்தந்தி 31 Jan 2021 9:42 PM IST (Updated: 31 Jan 2021 9:45 PM IST)
t-max-icont-min-icon

சிவகிரியில் மயார் பூஜையில் வைக்கப்பட்ட ஒரு கிலோ நாட்டு சர்க்கரை ரூ.1¼ லட்சத்துக்கு ஏலம் போனது.

சிவகிரி,

ஈரோடு மாவட்டம் சிவகிரி பகுதியில் தைப்பூசத்தன்று தொடங்கி ஒரு வாரம் மயார் பூஜை என்ற வழிபாடு நடைபெறும். அதாவது அனைத்து வீதிகளிலும் உள்ள சிறிய கோவில்களில் அன்னதானம் நடைபெறும். இதற்காக அன்று காலை முதல் மதியம் வரை ஒவ்வொரு வீடாக சென்று அப்பகுதி பொதுமக்கள் அரிசி, பருப்பு, காய்கறிகள், மளிகை பொருட்களை சேகரிப்பார்கள். 

பின்னர் தெருவில் உள்ள கோவிலில் சமைத்து அன்று இரவு அன்னதானம் நடைபெறும். இதில் ஏராளமானோர் கலந்துகொள்வார்கள். அன்னதானத்துக்கு முன்னதாக சாதத்தை மலைபோல் குவித்துவைத்து அனைத்து மக்களும் பசியின்றி இருக்கவேண்டும் என்று மகேஸ்வர பூஜை (மயார் பூஜை) நடத்துவார்கள். 

அன்னதானம் முடிந்ததும் பூஜையில் வைக்கப்பட்ட பொருட்கள் ஏலம் நடைபெறும். பல்வேறு வேண்டுதல்களுக்காக அதிக விலை கொடுத்து பொருட்களை பொதுமக்கள் ஏலம் எடுப்பார்கள்.

இந்தநிலையில் சிவகிரி தி.ரு.வி.க. தெருவில் உள்ள  அப்பர், சம்பந்தர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் என நால்வர் எழுந்தருளிய மடக்கோவில் உள்ளது. 70 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் கடந்த 50 ஆண்டுகளாக ஆண்டுதோறும் மயார் பூஜை நடைபெற்று வருகிறது. 

அதேபோல் இந்த ஆண்டுக்கான மயார் பூஜை நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதற்காக 5 சிறிய பானைகளில் தலா ஒரு கிலோ உப்பு, அரிசி, நாட்டு சர்க்கரை, பருப்பு, மஞ்சள்தூள் ஆகியவை பூஜையில் வைக்கப்பட்டிருந்தது. அன்னதானம் முடிந்ததும் இவற்றை பக்தர்கள் போட்டிபோட்டு ஏலம் எடுத்தனர்.

இந்த ஏலத்தில் ஒரு கிலோ உப்பு பானையை சிவகிரி அம்மா நகரை சேர்ந்த பள்ளிக்கூட ஆசிரியை மாலதி தங்கராஜ் என்பவர் ரூ.1 லட்சத்துக்கும், ஒரு கிேலா நாட்டு சர்க்கரையை சிவகிரி பாரதி தெருவை சேர்ந்த ஸ்ரீகாந்த்-மீனா தம்பதியினர் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் ஏலம் எடுத்தனர். மேலும் ஒரு கிலோ அரிசி பானையை சிவகிரி நால்வர் நிலைய வீதியைச் சேர்ந்த மாணிக்கசுந்தரம்-உமாவதி தம்பதியினர் 90 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் கூறி எடுத்தனர்.

இதேபோல் பூஜையில் வைக்கப்பட்ட 1 கிலோ பருப்பு பானை 38 ஆயிரம் ரூபாய்க்கு சிவகிரி அவ்வையார் தெருவை சேர்ந்த சண்முகம்-சத்யா தம்பதியினரும், ஒரு கிலோ மஞ்சள் தூள் பானையை கொடைக்கானலைச் சேர்ந்த கவிதா என்பவர் 67 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் கூறி எடுத்தார். 
இவ்வாறு ஏலம் எடுக்கும் பொருட்களை வீட்டில் வைத்து வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும் என்று அவர்கள் தெரிவித்தார்கள். 

Next Story