பூங்காக்களை பராமரிக்க தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி-கலெக்டர் தகவல்
வேலூர் மாநகராட்சியில் பூங்காக்களை பராமரிக்க தொண்டு நிறுவனங்களுக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் அனுமதி வழங்கியுள்ளார்.
வேலூர்
வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள சிறு பூங்காக்களை தொண்டு நிறுவனங்களிடம் வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பேசுகையில், வேலூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 96 சிறு பூங்காக்கள் மாநகராட்சி மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த பூங்காக்களில் புதிதாக மரக்கன்றுகள் நடுதல், நடைப்பாதை மற்றும் மின்விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை ரோட்டரி சங்கம், அரிமாசங்கம், குடியிருப்பு நலச்சங்கங்கள், இந்தியன் ரெட்கிராஸ் சங்கம், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவை பராமரிக்க அனுமதி வழங்கப்படுகிறது.
முதற்கட்டமாக 34 பூங்காக்கள் பராமரிப்பு பணிக்காக தொண்டு நிறுவனங்களிடம் வழங்கப்படுகிறது. பூங்காக்களில் சிறுவர்கள் விளையாடுவதற்கு வேண்டிய உபகரணங்களை அமைக்க வேண்டும்.
ரூ.5 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் மக்களுக்கு பயன்படக்கூடிய அம்சங்களை தொண்டு நிறுவனங்களே ஏற்படுத்தி கொள்ளலாம்.
பூங்காக்களில் மாடுகள், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர்கள், மது அருந்துபவர்கள், பூங்காக்களில் நடமாடுவதை தடை செய்ய வேண்டும்.
பூங்காக்களை சுத்தமாகவும், தூய்மையாகவும் பராமரிக்க வேண்டும் என்று கூறினார்.
கூட்டத்தில், மாநகராட்சி கமிஷனர் சங்கரன், பொறியாளர் சீனிவாசன், உதவி கமிஷனர்கள் மதிவாணன், வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story