இயக்குனர் கவுதமன் தடுத்து நிறுத்தம்


போலீசார் மற்றும் கவுதமனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது எடுத்த படம்.
x
போலீசார் மற்றும் கவுதமனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது எடுத்த படம்.
தினத்தந்தி 3 Feb 2021 10:10 PM IST (Updated: 3 Feb 2021 10:10 PM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க சென்ற இயக்குனர் கவுதமன் தடுத்து நிறுத்தப்பட்டார்.

சுல்தான்பேட்டை

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே வாரப்பட்டி ஊராட்சியில் 421.41 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சிப்காட் அமைக்கப்பட்டால் தங்கள் பகுதி விளைநிலங்கள் மற்றும் நீர்மட்டம் பாதிக்கப்படும் என்றுக்கூறி அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  

இந்த நிலையில் இன்று மதியம் சிப்காட் எதிர்ப்பு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கவும், சிப்காட் அமைய உள்ள இடத்தை பார்வையிடவும் தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும், சினிமா இயக்குனருமான கவுதமன் வாரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சந்திராபுரத்துக்கு வந்தார். இதை அறிந்ததும் அங்கு நூற்றுக்கணக்கான விவசாயிகள் திரண்டனர். 

அப்போது இயக்குனர் கவுதமனை கருமத்தம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சூரியமூர்த்தி, சூலூர் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். உடனே போலீசாருக்கும், இயக்குனர் கவுதமனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர்  கவுதமனை சுல்தான்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் பொதுமக்களை சந்திக்க மாட்டேன் என்ற உறுதிமொழியை பெற்றுக்கொண்டு சிப்காட் அமைய உள்ள கந்தம்பாளையம் உள்ளிட்ட பகுதியை பார்வையிட அனுமதித்தனர். அப்போது அவருடன் போலீஸ் உயர் அதிகாரிகள் இருந்தனர். அந்த இடத்தை பார்வையிட்ட பிறகுபல்லடம் வழியாக கோவைக்கு இயக்குனர் கவுதமன் புறப்பட்டு சென்றார். 

இதற்கிடையில் கவுதமனை போலீசார் கைது செய்து அழைத்து சென்றதாக தகவல் பரவியது. ஆனால் அவரை கைது செய்யவில்லை என போலீசார் தெரிவித்தனர். 

இதைத்தொடர்ந்து கோவை கலெக்டர் அலுவலகம் வந்த இயக்குனர் கவுதமன், வாரப்பட்டி பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கக்கூடாது என்று கலெக்டர் ராஜாமணியிடம் மனு அளித்தார்.

Next Story