அ.தி.மு.க. பெண் நிர்வாகி மீது தாக்குதல்: தி.மு.க.வினர் 4 பேருக்கு கோவை கோர்ட்டு நிபந்தனை ஜாமீன்


அ.தி.மு.க. பெண் நிர்வாகி மீது தாக்குதல்: தி.மு.க.வினர் 4 பேருக்கு கோவை கோர்ட்டு நிபந்தனை ஜாமீன்
x
தினத்தந்தி 3 Feb 2021 10:34 PM IST (Updated: 3 Feb 2021 10:34 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. பெண் நிர்வாகி மீது தாக்குதல் தொடர்பான வழக்கில் தி.மு.க.வினர் 4 பேருக்கு கோவை கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது

கோவை

கோவையை அடுத்த தொண்டாமுத்தூரில் கடந்த மாதம் தி.மு.க. சார்பில் நடந்த கிராம சபை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. மகளிர் அணி மாவட்ட துணை செயலாளர் பூங்கொடி என்பவர் மு.க.ஸ்டாலினிடம் கேள்வி கேட்டார்.

 இதையடுத்து அவர் கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அப்போது தி.மு.க.வினர் தன்னை தாக்கியதாக கூறி தொண்டாமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். 

இதன்பேரில், கோவை வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், தொண்டாமுத்தூர் தொகுதி ஒன்றிய பொறுப்பாளர் செல்லப்பன் என்ற சாமிபையன், ஆலாந்துறை பகுதி செயலாளர் ரங்கசாமி, இளைஞர் அணி அமைப்பாளர் பெருமாள் ராஜா ஆகிய 4 பேர் மீது வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து தி.மு.க.வினர் 4 பேரும் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கோவை மாவட்ட கோர்ட்டில் சரண் அடைந்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டார். இதையடுத்து தி.மு.க.வினர் 4 பேரும் கோவை மாவட்ட முதன்மை கோர்ட்டில் இன்று  காலை ஆஜரானார்கள். 

அப்போது அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசு வக்கீல் மாரிமுத்து, பூங்கொடியின் வக்கீல் மாதவன் ஆகியோரும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று வக்கீல் அருள்மொழியும் வாதாடினார்கள். இரு தரப்பு வாதங்களையும் கேட்டபின்னர் தி.மு.க. நிர்வாகிகள் 4 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டார்.

 மேலும் மறுஉத்தரவு வரும் வரை 4 பேரும் தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்தில் காலையும், மாலையும் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவில் கூறியுள்ளார்.

Next Story