என்எல்சி தலைமை அலுவலகத்தில் 16ந்தேதி முற்றுகை போராட்டம்-தமிழக வாழ்வுரிமை கட்சி


என்எல்சி தலைமை அலுவலகத்தில் 16ந்தேதி முற்றுகை போராட்டம்-தமிழக வாழ்வுரிமை கட்சி
x
தினத்தந்தி 3 Feb 2021 10:42 PM IST (Updated: 3 Feb 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

என்எல்சி தலைமை அலுவலகத்தில் வருகிற 16ந்தேதி முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.

நெய்வேலி. 

நெய்வேலியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

புறக்கணிப்பு

மத்திய பா.ஜனதா அரசு பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை தட்டிப் பறித்து வருகிறது. மத்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் மண்ணின் மக்களை புறக்கணித்து விட்டு வட இந்தியர்களை உயர்பதவியில் நியமனம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக சமீபத்தில் நடந்து முடிந்த 259 என்ஜினீயர் பணியிடங்களுக்கான தேர்வில் 10 இளைஞர்கள் கூட தமிழகத்தில் தேர்வாகவில்லை. இந்த தேர்வுக்கு தமிழகத்தில் லட்சக்கணக்கான படித்த இளைஞர்கள் இருக்கும்போது தமிழர்கள் தேர்வு பெறாமல் போனது எப்படி?. 

மேலும் என்.எல்.சி. நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்தவர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், பழகுனர் பயிற்சி தொழிலாளர்கள், பணியின் போது உயிரிழந்த வாரிசுகள் உள்ளிட்டோர் வேலைவாய்ப்பு வழங்க கோரி பல்வேறு போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு வேலை வழங்காமல் என்.எல்.சி. நிறுவனம் தொடர்ச்சியாக புறக்கணித்து வருகிறது. 

16-ந்தேதி போராட்டம்

தமிழக அரசு இந்த விஷயத்தில் கள்ள மவுனம் சாதிப்பது நியாயம் அல்ல. எனவே தமிழக முதல்-அமைச்சர், பொறியாளர் தேர்வை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வருகிற 16ந்தேதி என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு மாபெரும் தொடர் போராட்டம் நடத்தப்படும். 

மேலும் தமிழக முதல்-அமைச்சர் இதற்கான அறிவிப்பை சட்டமன்றத்தில் உடனடியாக வெளியிட வேண்டும். வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புக்கான போராட்டம் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. மத்திய மாநில அரசுகள் சாதி வாரியான கணக்கெடுப்புகள் இதுநாள் வரை நடத்தவில்லை. 

வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நானும் பல்வேறு வன்னிய சமூகத்தினரும் சந்தித்து தமிழகத்தில் வன்னியர்களுக்கு 15 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். அதற்கு தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார்.

 தற்போது சட்டமன்ற தேர்தலை வைத்து டாக்டர் ராமதாஸ் வன்னியர் இட ஒதுக்கீட்டை நோட்டுக்கும், சீட்டுக்கான ஆயுதமாக கையில் எடுத்துள்ளதாக தெரியவருகிறது. 

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா மற்றும் முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் தங்கள் சமூகத்திற்கு தேவையான இட ஒதுக்கீட்டை கேட்டுப்பெறலாம், அதை விட்டுவிட்டு பிற சாதி தமிழர்களை தூண்டி விடுவது போல் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். 
இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

Next Story