காங்கேயம் அருகே உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நேற்று தீச்சட்டி ஏந்தி போராட்டம்
காங்கேயம் அருகே உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நேற்று தீச்சட்டி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கேயம்,
காங்கேயம் அருகே படியூரில் உயர்மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவாகவும், கோரிக்கையை வலியுறுத்தியும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தொடர் காத்திருப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
விவசாய விளை நிலங்களில் உயர் மின் கோபுரம் விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான 765 கிலோ வாட் திட்டத்தை முழுமையாக நிறுத்த வேண்டும். அனைத்து திட்டங்களும் சாலையோரமாக கேபிள் மூலம் அமைக்க வேண்டும்.
கோரிக்கைகள்
முடிவடையும் நிலையில் உள்ள திட்டங்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலத்திற்கு ஒவ்வொரு முறையில் இழப்பீடு நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். அனைவருக்கும் மாத வாடகை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்.
குறைந்தபட்ச இழப்பீடாக தற்போது ரூ.50 ஆயிரம் அறிவித்துள்ளதை உயர்த்தி ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். அறவழியில் போராடிய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள 38 வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தீச்சட்டி ஏந்தி போராட்டம்
இதைத்தொடர்ந்து அரை நிர்வாண போராட்டம், கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டம், ரத்தத்தில் உயர் மின்கோபுரம் வேண்டாம் என எழுதி எதிர்ப்பு, கண்களை கட்டிக்கொண்டு போராட்டம், நிலத்தின் பட்டா நகல் எரித்து எதிர்ப்பு உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் 15-ம் நாளான நேற்று மதியம் சிறப்பு கவன ஈர்ப்பு போராட்டமாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விவசாயிகள் தீச்சட்டி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story