போதைமறுவாழ்வு மையத்தில் வாலிபர் மர்மச்சாவு


போதைமறுவாழ்வு மையத்தில் வாலிபர் மர்மச்சாவு
x
தினத்தந்தி 4 Feb 2021 12:21 PM IST (Updated: 4 Feb 2021 12:21 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டையில் குடிபோதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் மர்மமான முறையில் இறந்தார்

 ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் குடிபோதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் மர்மமான முறையில் இறந்தார்து கிடந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.

போதை மறுவாழ்வு மையம்

ராணிப்பேட்டையை அடுத்த வாணாபாடி ஊராட்சிக்குட்பட்ட மாணிக்க நகர் பகுதியை சேர்ந்தவர் மணி. அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் வாணாபாடி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் ஆவார். இவரது மகன் சரவணன் (வயது 26), ஆற்காடு அருகே புதுப்பாடி பகுதியிலுள்ள ரேஷன் கடை ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
சரவணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் ஆகி உள்ளது. குடிப்பழக்கம் இருந்ததால் சரவணனை, அவரது குடும்பத்தினர்  ராணிப்பேட்டை சீயோன் நகர் பகுதியில் உள்ள குடி மற்றும் போதைகள் மறுவாழ்வு மையம் ஒன்றில் கடந்த சில தினங்களுக்கு முன் சேர்த்துள்ளனர். இதற்காக அந்த மறுவாழ்வு மையத்தில் பணமும் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

மர்மச்சாவு

இந்த நிலையில் அந்த மறுவாழ்வு மையத்தில் நேற்று சரவணனை அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் சரவணன் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சரவணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் நேற்று இரவு ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாதானம் பேசி போக்குவரத்தை சரி செய்தனர்.

 கண்ணாடி உடைப்பு

இந்தநிலையில் மறுவாழ்வு மையத்தில் உள்ளவர்கள் தாக்கியதால்தான் சரவணன் இறந்தார் என்று கூறி சிலர் மறுவாழ்வு மையத்தின் ஜன்னல் கண்ணாடி உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மறுவாழ்வு மையத்தில் குடிபோதையை மறக்க சிகிச்சைக்கு அனுமதித்துள்ளவர்களிடம் கேட்டபோது, இந்த மையத்தில் சுமார் 22 பேர் தங்கி உள்ேளாம். எங்களுக்கு சரியான உணவும் கொடுக்காமல் துன்புறுத்துகின்றனர். அரசு உடனடியாக இதில் தலையிட்டு தங்களை, தங்கள் குடும்பத்தினருடன் சேர்க்க வேண்டும் என்று கண்ணீருடன் கூறினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story