பணியில் சேர்ந்த சில மாதங்களிலேயே போலீஸ்காரர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை
ஏலகிரி மலையில், பணியில் சேர்ந்த சில மாதங்களிலேயே போலீஸ்காரர் மதுவில் விஷம்கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஜோலார்பேட்டை
ஏலகிரி மலையில், பணியில் சேர்ந்த சில மாதங்களிலேயே போலீஸ்காரர் மதுவில் விஷம்கலந்து குடித்து
தற்கொலை செய்துகொண்டார். காதலித்த பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில் நடந்த
இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
போலீஸ்காரர்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஊசி நாட்டான் வட்டம் பகுதியை சேர்ந்தவர் முரளி.
இவரது மகன் பூவரசன் (வயது24). இவர் கடந்த ஆண்டு காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று, கோயம்புத்தூரில்
ஒருவருடம் பயிற்சி பெற்றார். பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூரிலேயே போலீஸ் நிலையத்தில் பணியில் சேர்ந்துள்ளார்.
இந்த நிலையில் உறவினரின் திருமணத்திற்காக கடந்த 31-ந் தேதி 3 நாள் விடுமுறையில் பூவரசன் சொந்த
ஊருக்கு வந்துள்ளார். ஜோலார்பேட்டை அருகே உள்ள குடியான குப்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணை
பூவரசன் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்தப்பெண்ணும் கோயம்புத்தூரில்
உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.
நிச்சயதார்த்தம்
இதை அறிந்த பூவரசனின் குடும்பத்தினர், பெண் வீட்டாருக்கு தகவல் தெரிவித்து பெண்
வீட்டுக்கு சென்று, இரு குடும்பத்தினரும் பூ மாற்றிக்கொண்டனர். மேலும் வருகிற 8-ந் தேதி (திங்கட்கிழமை)
நிச்சயம் செய்வதாக பூவரசனின் குடும்பத்தினர் கூறிவிட்டு சென்றனர்.
இந்தநிலையில் நேற்று மாலை வரை பூவரசன் தனது வீட்டுக்கு வராததால் அவரது பெற்றோர்கள், பூவரசனின்
செல்போனை தொடர்புகொண்டபோது சுவிட்ச் ஆப் என வந்தது. உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம்
விசாரித்தபோது மேட்டுசக்கர குப்பம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் பூவரசனை
பார்த்ததாகவும், பொன்னேரிக்கு சென்று வருவதாக கூறிச்சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.
மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் ஏலகிரி
மலையில் வாரக் கொட்டை பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதிக்குள் அவருடைய
மோட்டார்சைக்கிள் இருந்தது. இதில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் பூவரசன் பிணமாக கிடந்தார். அவர்
மதுவில் விஷம் கலந்து குடித்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஏலகிரிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு
விரைந்து வந்த ஏலகிரிமலை சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார், பூவரசனின் உடலை பிரேத
பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பூவரசன் ஏலகிரிமலைக்கு தனியாக வந்தாரா? அல்லது வேறு
யாராவது உடன் வந்தார்களா என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து
போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story