பல மணிநேரம் மூடப்படும் ரெயில்வேகேட்; நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு எப்போது?
நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு எப்போது கிடைக்கும் என பொதுமக்கள் விரக்தியுடன் காத்திருக்கும் சூழல் உருவாகி உள்ளது. ஒரு நாளைக்கு பல மணிநேரம் ரெயில்வே கேட் மூடப்படுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
நீடாமங்கலம்:
நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு எப்போது கிடைக்கும் என பொதுமக்கள் விரக்தியுடன் காத்திருக்கும் சூழல் உருவாகி உள்ளது. ஒரு நாளைக்கு பல மணிநேரம் ரெயில்வே கேட் மூடப்படுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
போக்குவரத்து நெருக்கடி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. கிராம மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கும், இதர வேலைகளுக்கும் நீடாமங்கலத்தை சார்ந்துள்ளன ர்.
இதன் காரணமாக நீடாமங்கலத்தில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி அதிகமாகவே உள்ளது. வாகன போக்குவரத்துக்கு ஏற்ப நீடாமங்கலத்தில் சாலையின் தரம் மேம்படுத்தப்படவில்லை என்பது பொதுமக்களின் பல ஆண்டுகால வருத்தமாக உள்ளது.
ரெயில்வே கேட்
திருச்சி, தஞ்சை ஆகிய இடங்களில் இருந்து திருவாரூர், நாகை, வேளாங்கண்ணி, நாகூர், காரைக்கால் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் நெடுஞ்சாலையில் நீடாமங்கலம் நகரம் அமைந்துள்ளது.
தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநில மக்களும் நீடாமங்கலம் நகரம் வழியாக சுற்றுலா வாகனங்களில் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகிறார்கள். நீடாமங்கலத்தில் நெடுஞ்சாலையின் குறுக்கே ரெயில்வே கேட் அமைந்து இருப்பது உள்ளூர் மக்களை மட்டுமின்றி வெளியூர் பயணிகளையும் சிரமத்துக்கு ஆளாக்கி வருகிறது. ரெயில்வே கேட்டை மூடி விடுவார்களே என்ற பதைபதைப்புடன் வாகன ஓட்டிகள் ஒவ்வொரு நாளும் நீடாமங்கலத்தை கடந்து செல்கிறார்கள்.
மன்னை எக்ஸ்பிரஸ்
இந்த நிலையில் சென்னையில் இருந்து மன்னார்குடி செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்காக நீடாமங்கலம் ரெயில்வே கேட் இன்று அதிகாலை 4.35 மணியளவில் மூடப்பட்டது.
அந்த ரெயில் சென்றவுடன் கேட் திறக்கப்பட்டது. அதன் பின்னர் சிறிது நிமிடங்களே திறந்து இருந்த ரெயில்வே கேட் சரக்கு ெரயில் போக்குவரத்துக்காக மீண்டும் மூடப்பட்டது. சரக்குரெயில் காலி பெட்டிகளை பிரித்து நிறுத்தும் பணி முடிந்த பிறகு 5.55 மணிக்கு ரெயில்வே கேட் திறக்கப்பட்டது. இதன் காரணமாக அதிகாைலயிலேயே ஒரு மணிநேரம் மக்கள் அவதிப்பட நேர்ந்தது.
தீர்வு எப்போது?
பொது கழிவறை வசதி இல்லாத நிலையில் வெளியூர் பயணிகள் ரெயில்வே கேட் மூடப்படும் போதெல்லாம் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெருக்கடி பிரச்சினை என்பது தீராத வேதனை என பொதுமக்கள் கூறுகிறார்கள்.
ஒரு நாளைக்கு பல மணிநேரம் ரெயில்வே கேட் மூடப்படுவதால், அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் கடும் அவதியை சந்தித்து வருகிறார்கள். நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெருக்கடிக்கு எப்போது தீர்வு காணப்படும்? என பொதுமக்கள் விரக்தியுடன் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ள நிலையில் ரெயில்வே மேம்பால திட்டம், இருவழிச்சாலை திட்டம் போன்ற திட்டங்களை விரைவுபடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்பதே அனைத்து தரப்பினரின் கேள்வியாகும்.
Related Tags :
Next Story