திருவாரூரில் கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் சாலை மறியல் 118 பேர் கைது
திருவாரூரில் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 118 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்:
திருவாரூரில் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 118 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிறை நிரப்பும் போராட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி பணியாளர் மற்றும் தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணிபுரியும் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
அரசுத்துறையில் ஆட்கள் குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டத்தை கடந்த 2-ந் தேதி அரசு ஊழியர் சங்கத்தினர் தொடங்கினர்.
118 பேர் கைது
திருவாரூரில் இன்று 3-வது நாளாக போராட்டம் நடந்தது. இதையொட்டி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சங்க மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். சாலை மறியலின்போது அரசு ஊழியர்கள் சாலையில் படுத்தபடி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மறியல் காரணமாக திருவாரூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து திருவாரூர் தாலுகா போலீசார் மறியலில் ஈடுபட்ட 50 பெண்கள் உள்பட 118 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story