வால்பாறையில் பனிக்காலம் முடிவடைந்தது பச்சை தேயிலை மகசூல் அதிகரிப்பு
வால்பாறையில் பனிக்காலம் முடிவடைந்ததால், பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
வால்பாறை
வால்பாறையில் பனிக்காலம் முடிவடைந்ததால், பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
பனிக்காலம் முடிந்தது
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் பனிக்காலம் முடிவடைய தொடங்கியதால், கடுமையான வெப்பம் நிலவுகிறது. வழக்கமாக வால்பாறை பகுதியில் பனிக்காலத்தில் தேயிலை செடிகள் கருக தொடங்கிவிடும். இதனால் பச்சை தேயிலை மகசூல் பாதிக்கப்படும். இதற்கு காரணம், பிப்ரவரி மாதம் இறுதி வரை பனிக்காலம் நீடிக்கும். பகல் நேரத்தில் வெப்பம் குறைந்து காணப்படும்.
ஆனால் இந்த ஆண்டு தற்போது பனிக்காலம் முடிந்து, பகல் நேரத்தில் வெப்ப நிலை அதிகரித்து காணப்படுகிறது. இரவில் பெய்யக்கூடிய பனிப்பொழிவும், பகலில் நிலவும் வெப்பமும் காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள ஒரு சில எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் பச்சை தேயிலை இலைகள் துளிர் விட்டு வளர்ந்து வருகின்றன.
மேலும் மகசூல் அதிகரிக்கும்
இந்த காலநிலை நீடித்தால் வால்பாறை பகுதியில் வருகிற நாட்களில் பச்சை தேயிலை மகசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கடந்த காலங்களில் மழை காரணமாக பச்சை தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டதால், தேயிலைத்தூள் வரத்து குறைந்து காணப்பட்டது.
இதனால் அனைத்து ரக தேயிலைத்தூளின் விலையும் அதிகரித்தது. இந்த நிலையில் தற்போது பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து வருவதால் மார்க்கெட்டிற்கு தேயிலைத்தூள் வரத்து உயர வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து வால்பாறை பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
விவசாயிகள் மகிழ்ச்சி
வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. கடந்த மாதங்களில் கடும் பனிப்பொழிவு நிலவியதால், பச்சை தேயிலை மகசூல் முற்றிலும் பாதிக்கப்பட்டதால் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கவில்லை.
தற்போது இரவில் பனிப்பொழிவும், பகலில் வெயிலும் காணப்படுவதால், மீண்டும் மகசூல் அதிகரித்து வருகிறது. இது மகிழ்ச்சியை அளிக்கிறது. தொடர்ந்து இதே காலநிலை நீடித்தால், மகசூல் மேலும் அதிகரிக்கும் என்பதால், தேயிலைத்தூள் உற்பத்தியும் உயர வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story