மன்னார்குடி பகுதியில்மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்
மன்னார்குடி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஆய்வு செய்த மத்திய குழுவினரிடம், திருவாரூரை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
மன்னார்குடி:
மன்னார்குடி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஆய்வு செய்த மத்திய குழுவினரிடம், திருவாரூரை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
சம்பா-தாளடி சாகுபடி
திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு 1 லட்சத்து 8 ஆயிரத்து 609 எக்டேர் பரப்பளவில் சம்பா, 38 ஆயிரம் 765 எக்டேர் பரப்பளவில் தாளடி என 1 லட்சத்து 47 ஆயிரம் 374 எக்டேர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து இருந்தனர்.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் (ஜனவரி) இயல்பான மழை அளவாகிய 48 மி.மீட்டர் என்ற அளவை தாண்டி 377 மி.மீட்டர் மழை பெய்தது.
மத்திய குழுவினர் ஆய்வு
கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்மை மற்றும் வருவாய்த்துறையினர் கணக்கெடுத்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்தனர். மத்திய அரசும் தமிழகத்தில் மழையால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்பி வைத்துள்ளது.
அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காரிக்கோட்டை, சவளக்காரன் உள்ளிட்ட இடங்களில் ஜனவரி மாதம் பருவம் தவறி தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழுவை சேர்ந்த சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சக மண்டல மேலாளர் ரணஞ்சேசிங், மத்திய மின்சார ஆணைய உதவி இயக்குனர் ஷீபம் கார்க், மீன்வள மேம்பாட்டுத்துறை ஆணையர் பால்பாண்டியன் ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது விவசாயிகளிடம், மத்திய குழுவினர் நெற்பயிர்கள் பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர். மன்னார்குடி கீழப்பாலம் பகுதியில் சாலை பாதிப்பு குறித்தும், நீடாமங்கலம் வட்டத்துக்கு உட்பட்ட வடுவூர் அக்ரஹாரம் பகுதியில் நெடுஞ்சாலை பாதிப்பு குறித்தும், சித்தாம்பூர் பகுதியில் பயிர் பாதிப்பு குறித்தும் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
வேளாண்மை அதிகாரிகள்
அப்போது வேளாண்மைத்துறை இயக்குனர் தெட்சிணாமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், வேளாண் இணை இயக்குனர் சிவக்குமார், மன்னார்குடி உதவி கலெக்டர் புண்ணியகோட்டி, வேளாண்துறை துணை இயக்குனர் உத்திராபதி, வேளாண்துறை உதவி இயக்குனர்கள் ஹேமா ஹெப்சிபா நிர்மலா, சாருமதி, மன்னார்குடி ஒன்றியக்குழு தலைவர் மனோகரன், துணைத்தலைவர் வனிதா அருள்ராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
கம்யூனிஸ்டு கட்சியினர் மனு
சவளக்காரனில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தபோது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் செல்வராஜ் மற்றும் கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில், ‘திருவாரூர் மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். வேலை வாய்ப்பினை இழந்துள்ள விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். பயிர்க்காப்பீடு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் 100 சதவீத பாதிப்பினை உறுதிசெய்து இழப்பீடு வழங்கவும், பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story