போலி வாரிசு சான்றிதழ் பெற்று மூதாட்டிக்கு சொந்தமான ரூ.25 லட்சம் மதிப்புள்ள இடத்தை அபகரித்த உறவினர் கைது


போலி வாரிசு சான்றிதழ் பெற்று மூதாட்டிக்கு சொந்தமான ரூ.25 லட்சம் மதிப்புள்ள இடத்தை அபகரித்த உறவினர் கைது
x
தினத்தந்தி 4 Feb 2021 10:33 PM IST (Updated: 4 Feb 2021 10:33 PM IST)
t-max-icont-min-icon

போலி வாரிசு சான்றிதழ் பெற்று மூதாட்டிக்கு சொந்தமான ரூ.25 லட்சம் மதிப்புள்ள இடத்தை அபகரித்த உறவினர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம், 

விழுப்புரம் அருகே உள்ள தொடர்ந்தனூரை சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி பொன்னம்மாள் (வயது 85). இவருடைய மாமனார் சுப்புராயன், கடந்த 1929-ம் ஆண்டு விழுப்புரம் பானாம்பட்டு பகுதியில் 1 ஏக்கர் 5 சென்ட் இடத்தை கிரையம் பெற்று அனுபவித்து வந்தார். அவரது மறைவுக்கு பின்னர் அவரது மகனான ராமலிங்கமும், பொன்னம்மாளும் அந்த இடத்தை அனுபவித்து வந்தனர். இவர்களுக்கு வாரிசு இல்லை.

இந்நிலையில் ராமலிங்கம் இறந்த பிறகு அவரது பெயரில் அந்த இடத்திற்கு பொன்னம்மாள் தீர்வை செலுத்தி அனுபவித்து வருகிறார். இவருக்கு பிள்ளைகள் இல்லாத நிலையில் முறைப்படி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து உறவினர் ஒருவரின் மகனான தனசேகரன் என்பவரை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இதை மறைத்து பொன்னம்மாளின் உறவினரான தொடர்ந்தனூரை சேர்ந்த சுந்தர்ராஜன் (39) என்பவர் விழுப்புரம் தாசில்தாரிடம் கடந்த 28.5.2016 அன்று போலி கையொப்பமிட்டு மோசடியாக வாரிசு சான்றிதழை பெற்றுள்ளார்.

இடம் அபகரிப்பு

இந்த போலி சான்றிதழின் மூலம் பொன்னம்மாளை காப்பீட்டு திட்டத்தில் சேர்ப்பதாக கூறி கடந்த 6.6.2016 அன்று அவரை நம்ப வைத்து விழுப்புரம் இணை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சுந்தர்ராஜன் அழைத்து வந்து கிரய பத்திரத்தில் கைரேகை பெற்று அவருக்கு சொந்தமான 1 ஏக்கர் 5 சென்ட் இடத்தை அபகரித்து மோசடி செய்து விட்டார். 

அபகரிக்கப்பட்ட இடத்தின் தற்போதைய மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.இதையறிந்ததும் அதிர்ச்சியடைந்த பொன்னம்மாள், இதுபற்றி சுந்தர்ராஜனிடம் சென்று தட்டிக்கேட்டுள்ளார். அதற்கு பொன்னம்மாளுக்கு சுந்தர்ராஜன் கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து பொன்னம்மாள், விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். மேலும் கடந்த சில வாரத்திற்கு முன்பு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ஆய்வுப்பணிக்கு வந்த வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. நாகராஜனிடமும் பொன்னம்மாள், கண்ணீர் மல்க புகார் மனு கொடுத்து இதுசம்பந்தமாக நடவடிக்கை எடுக்கும்படி முறையிட்டார்.

உறவினர் கைது

இதையடுத்து ஐ.ஜி. நாகராஜன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் ஆகியோரின் உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்து வந்த சுந்தர்ராஜனை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் விழுப்புரம் பகுதியில் இருந்து நேற்று  வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற சுந்தர்ராஜனை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி விழுப்புரம் வேடம்பட்டில் உள்ள சிறையில் அடைத்தனர்.

Next Story