3-வது நாளாக மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 158 பேர் கைது


3-வது நாளாக மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 158 பேர் கைது
x
தினத்தந்தி 4 Feb 2021 10:36 PM IST (Updated: 4 Feb 2021 10:36 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் கோரிக்கைகளை வலியுறுத்தி 3-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 158 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி:

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2-ந்தேதி முதல் தமிழகத்தில் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, தேனியில் 3-வது நாளாக இன்றும் அரசு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதற்காக அரசு ஊழியர்கள் பலர் தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையம் முன்பு திரண்டனர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இதற்கு மாவட்ட தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் அங்கிருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். 

போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நுழைவு வாயில் அருகில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கேயே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்ட 142 பெண்கள் உள்பட 158 பேரை போலீசார் கைது செய்து பஸ்களில் ஏற்றினர். பின்னர் அவர்கள் தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Next Story