பெண் ஊழியரை ஆபாசமாக படம் எடுத்ததாக கூறி மிரட்டல்: மாநகராட்சி ஆஸ்பத்திரி தூய்மை பணியாளர் தற்கொலை


ரங்கசாமி
x
ரங்கசாமி
தினத்தந்தி 4 Feb 2021 10:52 PM IST (Updated: 4 Feb 2021 10:58 PM IST)
t-max-icont-min-icon

பெண் ஊழியரை ஆபாசமாக படம் எடுத்ததாக கூறி மிரட்டியதால் மாநகராட்சி ஆஸ்பத்திரி தூய்மை பணியாளர் தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர், தனது சாவுக்கு 3 பேர் காரணம் என்று வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போத்தனூர்

பெண் ஊழியரை ஆபாசமாக படம் எடுத்ததாக கூறி மிரட்டியதால் மாநகராட்சி ஆஸ்பத்திரி தூய்மை பணியாளர் தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர், தனது சாவுக்கு 3 பேர் காரணம் என்று வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:-

தூய்மை பணியாளர்

கோவையை அடுத்த குனியமுத்தூர் அருகே உள்ள பி.கே.புதூரை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 42). இவர் கோவையில் உள்ள ஒரு மாநகராட்சி ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார்.

வழக்கம்போல பணிக்கு சென்ற ரங்கசாமி, மனஅழுத்தத்துடன் வீட்டுக்கு வந்தார். அவர் திடீரென்று எலிமருந்தை கரைத்து குடித்து மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி, ரங்கசாமியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். 

அங்கு சிகிச்சை பலனின்றி ரங்கசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வைரலாகும் வீடியோ

இந்தநிலையில் ரங்கசாமி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது செல்போனில் பேசி பதிவு செய்த வீடியோவை பலருக்கும் அனுப்பி உள்ளார். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் அவர் பேசி இருப்பதாவது:-

மாநகராட்சி ஆஸ்பத்திரியில் உள்ள மெடிக்கலில் வேலை பார்க்கும் ஒருவரும், கணினி பிரிவில் வேலை பார்க்கும் இளம்பெண்ணும் ஆஸ்பத்திரியில் உள்ள ஒரு அறையில் தனிமையில் இருந்தனர். 

அதை நான்பார்த்து விட்டேன். எனவே நான் செய்யாத காரியத்தை செய்ததாக கூறி பணியில் இருந்து வெளியில் அனுப்பும் முயற்சியில் சிலர் ஈடுபட்டனர்.

இளம்பெண் உடை மாற்றுவதை நான் வீடியோ மற்றும் போட்டோ எடுத்ததாக அந்த இளம்பெண்ணும், ஒரு வாலிபர் மற்றும் ஒரு நர்சு ஆகிய 3 பேர் என் மீது அபாண்ட குற்றத்தை சுமத்தி மிரட்டினார்கள். என்னை பற்றி தவறான தகவல்களை மருத்துவர்களிடம் கூறினார்கள். 

தேவை இல்லாமல் நான் செய்யாத தவறை செய்ததாக கூறி மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிறார்கள். என் சாவுக்கு அவர்கள் 3 பேர்தான் காரணம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போலீஸ் விசாரணை

தனது தற்கொலை காரணமானவர்கள் என 3 பேரின் பெயரை குறிப்பிட்டு ரங்கசாமி பதிவு செய்த வீடியோ கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து ரங்கசாமியின் தற்கொலைக்கு காரணமான மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது மகள் மற்றும் உறவினர்கள் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story