எட்டயபுரம் அருகே கோவில் விழாவில் பெண்களிடம் 16 பவுன் நகை பறிப்பு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
எட்டயபுரம் அருகே கோவில் விழாவில் பெண்களிடம் 16 பவுன் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
எட்டயபுரம்,
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள இளம்புவனம் கிராமத்தில் பூமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவில், இளம்புவனம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில், இளம்புவனம் வண்ணார் தெருவை சேர்ந்த சின்னமுத்து மனைவி ஆவுடையம்மாள் (வயது 63) அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர்.
இதேபோல் யாதவர் தெருவை சேர்ந்த மந்திரம் மனைவி பேச்சியம்மாள் (60) என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலி, செண்பகா நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி சண்முகம் அம்மாளிடமிருந்து 5 பவுன் தங்க சங்கிலி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகேஸ்வரி (50) என்பவரிடம் இருந்து 3 பவுன் தங்க நகை ஆகியவற்றை மர்மநபர்கள் பறித்துச்சென்றனர். மொத்தம் 4 பெண்களிடம் இருந்து 16 பவுன் தங்க நகை பறிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் எட்டயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
எட்டயபுரம் அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் பெண்களிடம் நகை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story