திருவாரூர் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு 23 ஆண்டுகள் சிறை மகிளா கோர்ட்டு தீர்ப்பு


திருவாரூர் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு 23 ஆண்டுகள் சிறை மகிளா கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 4 Feb 2021 11:06 PM IST (Updated: 4 Feb 2021 11:14 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள கூத்தாநல்லூர் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி(வயது 42). தொழிலாளி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை அடிக்கடி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

இதில் சிறுமி கர்ப்பம் அடைந்ததாகவும், பின்னர் கர்ப்பம் கலைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறினார்.

இதுகுறித்து சிறுமியின் தாயார், திருவாரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை கைது செய்தனர். 
இதுதொடர்பான வழக்கு விசாரணை திருவாரூர் மகிளா விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி சுந்தரராஜன் நேற்று தீர்ப்பு கூறினார். 

அப்போது சிறுமியை கர்ப்பமாக்கியதற்காக மூர்த்திக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 3 ஆண்டுகள் சிறைதண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம், பலமுறை அத்துமீறி வீட்டுக்குள் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததற்காக 5 ஆண்டுகள் சிறைதண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், கருச்சிதைவுக்கு மருந்து கொடுத்ததற்காக 5 ஆண்டுகள் சிறைதண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் என 23 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.23 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

சிறைதண்டனை பெற்ற மூர்த்தி ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பதுடன், தற்போது இந்த வழக்கில் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மல்லிகா ஆஜரானார்.

Next Story