அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல்


அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 4 Feb 2021 11:07 PM IST (Updated: 4 Feb 2021 11:08 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் 3-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம், 

அரசுத்துறையில் காலியாக உள்ள 4½ லட்சம் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக அரசு ஊழியர் சங்கத்தினர் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளுக்கு தீர்வு காணாததால் நேற்றும் 3-வது நாளாக தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் செய்தனர். அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே 3-வது நாளாக நேற்று காலை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடனே விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 66 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களின் போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. இதில் கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர். 

இதற்கு  மாவட்ட தலைவர் ஆனந்தகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மகாலிங்கம், மாவட்ட பொருளாளர் பி.ரவி, மாவட்ட துணைத்தலைவர் வீரபத்திரன், மாவட்ட இணை செயலாளர் சாமிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு அரசு சாலை பணியாளர்கள் சங்க மாநில துணைத்தலைவர் முத்து, நெடுஞ்சாலைத் துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் என்.ரவி, கிராம செவிலியர் சங்க மாநில துணைத் தலைவர் விஜயராணி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 34 பேரை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.

Next Story