காரிமங்கலம் அருகே மீன் வியாபாரி அடித்துக்கொலை- 3 வாலிபர்கள் கைது
காரிமங்கலம் அருகே மீன் வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
காரிமங்கலம்,
தர்மபுரி அருகே பிடமனேரி மொன்னையன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 45). மீன் வியாபாரி. இவரது மனைவி சிவகாமி.
இருவரும் குடும்ப தகராறு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். சிவகாமி தனது மூத்த மகள் ஜெயப்பிரியா, அவரது கணவர் திருப்பதியுடன் கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணந்தூர் சாமண்டபட்டியில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் கடந்த 30-ந் தேதி செல்வம் தனது மூத்த மகள் ஜெயப்பிரியாவின் வீட்டிற்கு சென்றார். அப்போது தனது மகளை, தேவிரஅள்ளி பகுதியை சேர்ந்த அரிஸ்டாட்டில் (32) என்ற வாலிபருடன் பழக்கம் வைத்திருந்ததாக கூறி கண்டித்து திட்டியுள்ளார். பின்னர் அங்கிருந்து தர்மபுரிக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார். இதுபற்றி ஜெயப்பிரியா அரிஸ்டாட்டிலிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அரிஸ்டாட்டில் அவரது நண்பர்களான காஞ்சீபுரத்தை சேர்ந்த சின்னதுரை (32), சதீஷ்குமார் (33) ஆகியோருடன் செல்வத்தை அடிப்பதற்காக மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
காரிமங்கலம் அருகே ஏரியின்கீழுர் பாலம் அருகில் சென்றதும் செல்வத்தை தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்துள்ளனர். பின்னர் அவரை சரமாரியாக அடித்து உதைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதனால் செல்வம் மயக்கம் அடைந்தார்.
சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்த பின்னர் தனது உறவினர்களுக்கு போன் மூலம் இதுபற்றி செல்வம் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் அவர்கள் வந்து செல்வத்தை மீட்டு அவரது வீட்டிற்கு அழைத்து வந்தனர். செல்வத்தை தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் இறந்தார்.
இதுகுறித்து காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ், சப்-இன்ஸ்பெக்டர் விஜய்சங்கர் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இந்த கொலை தொடர்பாக அரிஸ்டாட்டில், சின்னதுரை, சதீஷ்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் பாலக்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story