விருதுநகர் மாவட்டத்தில் பயிர் சேதம் குறித்து மத்திய குழுவினர் நேரடி ஆய்வு


விருதுநகர் மாவட்டத்தில் பயிர் சேதம் குறித்து மத்திய குழுவினர் நேரடி ஆய்வு
x
தினத்தந்தி 5 Feb 2021 12:43 AM IST (Updated: 5 Feb 2021 12:49 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் கன மழையால் பயிர் சேதம் அடைந்த பகுதிகளை மத்திய குழுவினர் நேரடியாக ஆய்வு செய்து விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர்.

விருதுநகர், 

தமிழகத்தில் தொடர் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பயிர் சேதம் ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் சேதம் அடைந்த நெல், மக்காச்சோளம், சோளம், பருத் தி உள்ளிட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். தொடர் மழை காரணமாக இம்மாவட்டத்தில் திருச்சுழி, வத்திராயிருப்பு, காரியாபட்டி, அருப்புக்கோட்டை, ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. 
பயிர் சேதங்கள் குறித்து வருவாய்த்துறை மற்றும் விவசாயத் துறையினர் கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் விவசாயிகள் மத்திய குழுவினர் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் மத்திய குழுவினர் நேற்று தென் மாவட்டங்களில் பயிர் சேதங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த குழுவில் மத்திய பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் டாக்டர் ஜெகநாதன் தலைமையில் டெல்லி உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் அக்தோஷ் அக்னி ஹோத்திரி, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை எண்ணெய் வித்து வளர்ச்சி இயக்குனர் டாக்டர் மனோகரன், மத்திய செலவினத்துறை நிதியமைச்சக துணை இயக்குனர் மகேஷ் குமார் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இக் குழுவினர் அருப்புக்கோட்டை யூனியன் பகுதியில் உள்ள செங்குளம், கீழ்குடி, மறவர்பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் கலெக்டர் கண்ணன் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் சேதம் அடைந்த பயிர்களை நேரில் பார்வையிட்டு பாதிப்பு குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனர். மேலும் பாதிப்படைந்த விவசாயிகள் தங்கள் கோரிக்கை மனுக்களை மத்திய குழுவிடம் வழங்கினர். மனுக்களை பெற்ற மத்திய குழுவினர் இது குறித்து ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்கப்படும் என உறுதி அளித்தனர்.

இம்மாவட்டத்தில் நெல் 5370 எக்டேர் நிலப்பரப்பிலும், சிறுதானியங்கள் 1113 எக்டேர் நிலப்பரப்பிலும் சேதமடைந்துள்ளது. பருப்பு வகைகள் 2107 எக்டேரிலும், மக்காச்சோளம் 2968 எக்டேரிலும், பருத்தி 2127 எக்டேர் நிலப்பரப்பிலும் சேதமடைந்துள்ளது. ஆக மொத்தம் 1 லட்சத்து 10 ஆயிரத்து 202 எக்டேர் நிலப்பரப்பில் பயிர் சாகுபடி செய்யப்பட்ட நிலையில் 11 ஆயிரத்து 556 எக்டேர் நிலப்பரப்பில் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இதுகுறித்து மத்திய குழுவிடம் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். 

முன்னதாக அருப்புக்கோட்டை யூனியன் கீழ்குடியில் பயிர்ச்சேதம் குறித்து அமைக்கப்பட்டிருந்த செயல்விளக்க கண்காட்சியினை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். இக்கண்காட்சியில் வி.நாங்கூர், புதுக்குளம், அல்லிகுளம், ஆலப்பேரி, கல்யாண சுந்தரபுரம், பரளச்சி ஆகிய கிராமங்களில் நெல், சிறு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், வெங்காயம், மிளகாய், மல்லி ஆகிய பயிர்கள் சேதம் அடைந்தது குறித்து மத்திய குழுவினர் பார்வையிட்ட போது விவசாயத் துறை அலுவலர்கள் பாதிப்பின் தன்மை குறித்து மத்திய குழுவிடம் விளக்கமளித்தனர்.


Next Story