பணம் திருடியதாக கூறி வாலிபர் கண்ணை கட்டி கொடூர தாக்குதல்


பணம் திருடியதாக கூறி வாலிபர் கண்ணை கட்டி கொடூர தாக்குதல்
x
தினத்தந்தி 5 Feb 2021 3:09 AM IST (Updated: 5 Feb 2021 3:09 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே பணம் திருடியதாக கூறி வாலிபர் கண்ணை கட்டி கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது.

சாலியமங்கலம், 

தஞ்சை அருகே பணம் திருடியதாக கூறி வாலிபர் கண்ணை கட்டி கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதால் மனமுடைந்த வாலிபர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள பூண்டி மேலத்தெருவை சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மகன் ராகுல் (வயது 22). கோனூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவரும், ராகுலும் நண்பர்கள். இருவரும் ஆற்றில் மணல் அள்ளும் கூலி வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி லட்சுமணன் வீட்டில் இருந்த ரூ.30 ஆயிரத்தை காணவில்லை. இந்த பணத்தை ராகுல் தான் எடுத்திருக்கலாம் என கருதி லட்சுமணன் மற்றும் அவருடைய நண்பர்கள் சிலர் ராகுலை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது ராகுல், தான் பணம் எடுக்கவில்லை என கூறி உள்ளார்.

ஆனால் இதனை நம்பாத லட்சுமணனின் நண்பர்கள், ராகுலின் கண்களை துண்டால் கட்டி கம்பால் கொடூரமாக தாக்கி உள்ளனர். மரத்தோடு சேர்த்து ராகுலை நிற்க வைத்து 2 பேர் கைகளை பிடித்துக்கொள்ள ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ளார். 

அப்போதும் ராகுல், தான் பணத்தை எடுக்கவில்லை என்றும் தன்னை விட்டுவிடுமாறும் கெஞ்சி உள்ளார். ஆனால் அதை காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் அவர்கள், ராகுலை கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர்.

இந்த காட்சிகளை லட்சுமணனின் நண்பர்களே செல்போனில் பதிவு செய்துள்ளனர். பின்னர் அந்த காட்சி நேற்று சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. 

இந்த நிலையில் தன் மீது திருட்டு பட்டம் சுமத்தியதாலும், தான் அடிவாங்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவியதாலும் மனமுடைந்த ராகுல், எலிமருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார்.

உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் வீடியோ பரவியதை பார்த்த அம்மாப்பேட்டை போலீசார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் ராகுலிடம் புகாரினை பெற்று விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக 6 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலைமுயற்சி ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் ராகுலின் நண்பர்கள் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story