ஈரோட்டில் 3-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 83 பேர் கைது
ஈரோட்டில் 3-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 83 பேரை போலீசார் கைது செய்தனர்.
உள்ளிருப்பு போராட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் 3 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி கடந்த 2-ந்தேதி சாலை மறியலில் ஈடுபட்ட 11 பெண்கள் உள்பட 36 பேரும், நேற்று முன்தினம் 13 பெண்கள் உள்பட 42 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு மாநகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டாலும் வீடுகளுக்கு செல்லாமல் மாநகராட்சி மண்டபத்திலேயே விடிய விடிய உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
83 பேர் கைது
இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை, கல்வித்துறை, மருத்துவ துறை, சத்துணவு, அங்கன்வாடி, சாலை பணியாளர்கள் ஒன்று கூடினார்கள். பின்னர் அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த போராட்டத்துக்கு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் ராக்கி முத்து தலைமை தாங்கினார். செயலாளர் விஜய மனோகரன் முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் சீனிவாசன், வருவாய்த்துறை சங்க மாநில துணைத்தலைவர் குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
இதைத்தொடர்ந்து அவர்கள் கச்சேரி வீதி செல்லும் ரோட்டில் அமர்ந்தும், படுத்தும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 27 பெண்கள் உள்பட 83 பேரை கைது செய்து மீண்டும் மாநகராட்சி மண்டபத்தில் தங்க வைத்தனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘அரசு ஊழியர்கள் சங்க மாநில நிர்வாகிகளை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தி எங்களுடைய கோரிக்கைக்கு சுமுக தீர்வு காண வேண்டும்’ என்று கூறினார்கள்.
Related Tags :
Next Story