கடலூரில், சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 40 பேர் கைது
3-வது நாளாக கடலூரில், சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 40 பேர் கைது.
கடலூர்,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.கால முறை ஊதியம் வழங்க வேண்டும். அரசுத் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கடலூரில் கடந்த 2 நாட்களாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று 3-வது நாளாக கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் அரசு ஊழியர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக திரண்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட நிர்வாகிகள் வெங்கடேசன், வெங்கடசலபதி, பாலகிருஷ்ணன், கவியரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் புருஷோத்தமன், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் காசிநாதன், மாவட்ட துணை தலைவர் கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து அவர்கள் பழைய கலெக்டர் அலுவலக சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். அப்போது தங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 18 பெண் ஊழியர்கள் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story