2 மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தாய் தற்கொலை
திருச்சிற்றம்பலம் அருகே 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சிற்றம்பலம்,
திருச்சிற்றம்பலம் அருகே 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஒட்டங்காடு ஊராட்சி கட்டயங்காடு கிராமம் மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் மதிவாணன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி(வயது 45).
இவர்களுக்கு அட்சயா(13), ஹேமாஸ்ரீ(7) என்ற இரண்டு பெண் குழந்தைகள். இருவரும் கட்டயங்காடு அரசு நடுநிலைப்பள்ளியில் படித்து வந்தனர். இவர்களில் அட்சயா கடந்த ஆண்டு 8-ம் வகுப்பும், ஹேமாஸ்ரீ 3-ம் வகுப்பும் முடித்து இருந்தனர்.
இந்த நிலையில் புவனேஸ்வரி சற்று மனநிலை பாதித்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மாலை மதிவாணன் வெளியில் சென்று விட்டார். வீட்டில் இருந்த புவனேஸ்வரி அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் தென்னை மரத்திற்கு பயன்படுத்தப்படும் மாத்திரை வடிவிலான விஷ மருந்தை வாங்கி வந்து கரைத்து தனது இரண்டு மகள்களுக்கும் கொடுத்துள்ளார். பின்னர் தானும் குடித்து உள்ளார்.இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், தாய்-மகள்களை மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே புவனேஸ்வரி இறந்தார். அட்சயாவும், ஹேமாஸ்ரீயும் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் அட்சயா தஞ்சைக்கு செல்லும் வழியிலேயே இறந்தார்.
ஹேமாஸ்ரீ தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு அவளும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள்.
இது குறித்து சொக்கநாதபுரம் கிராம நிர்வாக அலுவலர்(பொறுப்பு) ஒட்டங்காடு உட்கடை ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில், திருச்சிற்றம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரோஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மனநிலை பாதிக்கப்பட்ட தாய், இரண்டு மகள்களுக்கும் விஷம் கொடுத்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சிற்றம்பலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story