ஈரோட்டில் டாக்டர்கள் 4-வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டம்- இன்று மோட்டார் சைக்கிள் பிரசாரம் நடக்கிறது


ஈரோட்டில் டாக்டர்கள் 4-வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டம்- இன்று மோட்டார் சைக்கிள் பிரசாரம் நடக்கிறது
x
தினத்தந்தி 5 Feb 2021 6:25 AM IST (Updated: 5 Feb 2021 6:28 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் 4-வது நாளாக டாக்டர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) மோட்டார் சைக்கிள் பிரசாரம் நடக்கிறது.

ஈரோடு,

ஈரோட்டில் 4-வது நாளாக டாக்டர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) மோட்டார் சைக்கிள் பிரசாரம் நடக்கிறது.

4-வது நாள் போராட்டம்

நாடு முழுவதும் ஒரே மருத்துவ முறை என்ற நோக்கத்தில் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி அலோபதி டாக்டர்கள் மேற்கொண்டு வரும் அறுவை சிகிச்சைகளை சித்தா மற்றும் ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளை கற்ற டாக்டர்களும் மேற்கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. இதற்கு ஆங்கில முறை மருத்துவர்களான அலோபதி டாக்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கடந்த 1-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை பல கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்று இந்திய மருத்துவ சங்கம் அறிவித்து உள்ளது.
ஈரோட்டில் 1-ந் தேதி முதல் டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 4-வது நாள் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

டாக்டர்கள்

போராட்டத்துக்கு ஈரோடு கிளை இந்திய மருத்துவ சங்க பொருளாளர் டாக்டர் கே.சுதாகர் தலைமை தாங்கினார். இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணைத்தலைவர் டாக்டர் சி.என்.ராஜா முன்னிலை வகித்தார். போராட்டத்தில் இந்திய மருத்துவ சங்க ஈரோடு கிளை தலைவர் டாக்டர் எஸ்.டி.பிரசாத், செயலாளர் டாக்டர் செந்தில்வேலு, இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு முன்னாள் தலைவர் டாக்டர் எஸ்.எஸ்.சுகுமார், டாக்டர்கள் தங்கவேல், வீரசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு பல் டாக்டர்கள் சங்கத்தின் தேர்வு தலைவர் டாக்டர் உமாசங்கர் தலைமையில் பல் டாக்டர்களும் நேற்றைய உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர். மேலும், பெருந்துறை பகுதியை சேர்ந்த டாக்டர்கள் நேற்று பங்கேற்றனர்.

உயிர் பாதுகாப்பு

இந்த தொடர் போராட்டம் குறித்து டாக்டர் கே.சுதாகர் கூறியதாவது:-
மத்திய அரசு ஒரு கலவை மருத்துவ முறையை மக்களுக்கு கொடுக்க முடிவு செய்து இருக்கிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எங்கள் போராட்டம் சித்தா, ஆயுர்வேதம் அல்லது இந்திய மருத்துவ முறைகளுக்கு எதிரானது அல்ல. அறுவை சிகிச்சை என்பது ஒருவரின் உயிர் மற்றும் உடல் உறுப்புகளை பாதுகாப்பது. அதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். அலோபதி மருத்துவம் படிக்கும்போதே மருத்துவ மாணவர்கள் பெரும்பாலும் அறுவை சிகிச்சை அரங்கிலேயேத்தான் இருப்பார்கள். குறிப்பாக 2-ம் ஆண்டில் இருந்தே இந்த நடைமுறை தொடங்கி விடும். ஆனால், பிற மருத்துவ முறைகளில் அத்தகைய வாய்ப்பு இல்லை. இதுபற்றிய மேலும் பல தகவல்களை, விவரங்களை மூத்த டாக்டர்கள் மத்திய அரசுக்கு எடுத்துக்கூறி உள்ளனர்.
இந்திய மருத்துவத்துறையின் சிறந்த கட்டமைப்பை சீரழித்துவிடும் வகையில் மத்திய அரசின் புதிய திட்டம் உள்ளது. எனவே அதனை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 14-ந் தேதி வரை பல கட்ட போராட்டங்கள் நடக்கின்றன. ஈரோட்டில் நடைபெறும் போராட்டத்தில் கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி என்று அனைத்து பகுதிகளில் இருந்தும் டாக்டர்கள் வந்து பங்கேற்று வருகிறார்கள்.
பிரசாரம்

சிறப்பாக பல் டாக்டர்களும் இந்தபோராட்டத்தில் இணைந்து இருக்கிறார்கள். 
நாளை (அதாவது இன்று) கிருஷ்ணகிரியில் இருந்து 50 டாக்டர்கள் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து வழிதோறும் பிரசாரங்கள் செய்தபடி ஈரோடு வருகிறார்கள். வருகிற 14-ந் தேதி இந்திய மருத்துவ சங்கம் புதுடெல்லியில் கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கிறது. மக்களின் உயிர் சார்ந்த பிரச்சினையில் அக்கறையுடன் அரசு செயல்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. இந்திய மருத்துவ முறைகளை எதிர்ப்பது இல்லை. எங்கள் போராட்டத்தினால் நோயாளிகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைகள் எடுத்து இருக்கிறோம். பொதுமக்களும் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு ஈரோடு கிளை இந்திய மருத்துவ சங்க பொருளாளர் டாக்டர் கே.சுதாகர் கூறினார்.

Next Story