திருவள்ளூர் அருகே மண்ணுளி பாம்பை ரூ.2 கோடிக்கு விற்க முயன்ற 3 பேர் கைது
திருவள்ளூர் அருகே மண்ணுளி பாம்பை ரூ.2 கோடிக்கு விற்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் அருகே சட்டவிரோதமாக மண்ணுளி பாம்பை விற்க முயல்வதாக திருவள்ளூர் வனச்சரக அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருவள்ளூர் வனச்சரகர் கிருஷ்ணகுமார் தலைமையிலான வனத்துறையினர் பெரியகுப்பம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
3 பேர் கைது
அப்போது சட்டவிரோதமாக மண்ணுளி பாம்பை விற்க முயன்றதாக திருவள்ளூர் பெரியகுப்பம் சித்திவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்த உதயகுமார் (வயது 28), திருவள்ளூரை அடுத்த ஈக்காடு கல்யாண குப்பத்தை சேர்ந்த தங்கமணி (42), திருவள்ளூர் அடுத்த செங்குன்றம், லட்சுமிபுரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த பொன்னையன் (வயது 50) ஆகியோரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
ரூ.2 கோடி வரை
மேலும் அவர்களிடம் இருந்த 4½ கிலோ எடையும், ஆளுயர அளவும் உள்ள இந்த மண்ணுளி பாம்பை ரூ.2 கோடி வரை பேரம் பேசி விற்பனை செய்ய முயன்றது விசாரணையில் தெரியவந்தது, இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மண்ணுளி பாம்பில் மருத்துவ குணம் இருப்பதாக தவறான தகவலை பரப்பி அதன் மூலம் இந்த மோசடியில் பலர் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், தற்போது மீண்டும் இந்த மோசடி தொடங்கியுள்ளதாகவும் வனச்சரகர் தெரிவித்தார்.
மேலும் இதில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story