ஆரணி அருகே டிரான்ஸ்பார்மர் மீது வேன் மோதி 10 பெண் தொழிலாளிகள் படுகாயம்
ஆரணி அருகே டிரான்ஸ்பார்மர் மீது வேன் மோதி 10 பெண் தொழிலாளிகள் படுகாயம் அடைந்தனர். மின்தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணியில் இருந்து 10 பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று மாதவரத்தில் உள்ள நிறுவனத்துக்கு நேற்று காலை சென்று கொண்டிருந்தது.
அந்த வேனை சென்னங்காரணி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் (வயது 35) என்பவர் ஓட்டி சென்றார். பெரியபாளையம்-புதுவாயல் நெடுஞ்சாலையில் ஆரணி தமிழ் காலனி அருகே வேன் சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று சாலை வளைவில் திடீரென திரும்பியதால் வேன் டிரைவர் திடீரென்று பிரேக் பிடித்தார்.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது கண் இமைக்கும் நேரத்தில் பயங்கர சத்தத்துடன் மோதியது.
10 பேர் படுகாயம்
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த ஆரணி புவனேஸ்வரி, பனையஞ்சேரி சலோமி, ஆர்.என்.கண்டிகை நந்தினி, ஏ.என்.குப்பம் உஷா, மேல் முதலம்பேடு சந்தியா உள்ளிட்ட 10 பெண் தொழிலாளிகள் படுகாயம் அடைந்தனர்.
.உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவலறிந்த ஆரணி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர். விபத்தின்போது உடனடியாக மின்தடை ஏற்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
மேலும், இந்த விபத்தின் காரணமாக ஆரணி எஸ்.பி.கோவில் தெரு, முலிகி தெரு, பிஞ்சலார் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. மின்தடையால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு ஆளானார்கள்.
Related Tags :
Next Story