காளைவிடும் விழாவில் தள்ளுமுள்ளு போலீஸ் தடியடி
ஊசூர் அடுத்த மருதவல்லிபாளையத்தில் நேற்று நடந்த காளை விடும் விழாவில் முற்றுகை மற்றும் தள்ளுமுள்ளு நடந்தது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
அணைக்கட்டு,
ஊசூர் அடுத்து மருதவல்லி பாளையத்தில் நேற்று காளை விடும் விழா நடந்தது. இதில் பரதராமி, காட்பாடி, ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, வேலூர்,, பள்ளிகொண்டா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 187 காளைகள் பங்கேற்றன.
காளைகளை கால்நடை மருத்துவர் ரகு பரிசோதனை செய்து அனுமதி அட்டைகளை வழங்கினார். வேலூர் மாவட்ட உதவி ஆணையர் (கலால்) பூங்கொடி, அணைக்கட்டு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் முருகன், வேலூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு மகேஷ் (பொறுப்பு) ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.
வாடிவாசலில் இருந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக சீறிப் பாய்ந்து ஓடின. காளைகளை உற்சாகப்படுத்தியபோது காளைகள் முட்டியதில் 18 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு முகாமிட்டிருந்த ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் வெற்றிச்செல்வன், வினோத் சிகிச்சை அளித்தனர்.
விழா முடிய அரைமணி நேரம் இருக்கும்போது ஒருகாளை அதிவேகமாக ஓடி 7.50 செகன்டில் இலக்கை அடைந்தது. அந்தக் காளை முதல் பரிசான 70 ஆயிரத்தை தட்டிச் செல்ல இருந்தது. ஆனால் விழாக்குழுவினர்கள் அந்த காளையை போட்டியில் இருந்து விலகி விட்டனர்.
முற்றுகை, தள்ளுமுள்ளு
இதனால் ஆத்திரமடைந்த அந்த காளையின் உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் விழாக்குழுவினரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரை மணி நேரம் போட்டி நின்றது.
ஒலிபெருக்கியில் போலீசார் அறிவித்தும் முற்றுகையிட்ட நபர்கள் யாரும் கலையாததால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அப்போது போலீசாருக்கும், ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் விழாவில் பதற்றம் நிலவியது உடனே அந்தக் காளையின் உரிமையாளர்களுக்கு 3-வது பரிசு வழங்குவதாக விழாகுழுவினர் அறிவித்தனர். இதனால் காளையின் உரிமையாளர்கள் சமாதானம் அடைந்தனர். இதனையடுத்து இதற்கு அடுத்தபடியாக ஓடிய காளைக்கு முதல் பரிசாக 70 ஆயிரம் வழங்கப்பட்டது. மொத்தம் 45 பரிசுகள் வழங்கப்பட்டன.
4 மாடுகள் லேசான காயம் அடைந்தன. அவைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளிகத்தனர்.
Related Tags :
Next Story