அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு இழப்பீடு-ஊழியர் சங்கம் கோரிக்கை


அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு இழப்பீடு-ஊழியர் சங்கம் கோரிக்கை
x
தினத்தந்தி 5 Feb 2021 10:16 PM IST (Updated: 5 Feb 2021 10:16 PM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியை தமிழக அரசு கையகப்படுத்தி உள்ள நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அண்ணாமலைநகா். 

அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் மனோகரன் சிதம்பரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

நிதி இழப்பீடு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு சொந்தமான ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, பல் மருத்துவமனை, செவிலியர் கல்லூரி ஆகியவை தமிழக அரசின் சுகாதாரத்துறை மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் முழுமையாக கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு மிகுந்த நிதி இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

 குறிப்பாக இந்த மருத்துவக்கல்லூரி அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தின் தொலைதூர கல்வி இயக்கத்தினால் ஈட்டப்பட்ட வருமானம், பல்கலைக்கழக வருமானம் மற்றும் காப்பு நிதி ஆகியவற்றில் இருந்து ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, பல் மருத்துவமனை, செவிலியர் கல்லூரி ஆகியவற்றை உருவாக்க நிதி செலவிடப்பட்டுள்ளது. ஆகவே அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு ரூ.2 ஆயிரம் கோடியை தமிழக அரசு இழப்பீடு தொகையாக அளிக்க ஆவண செய்ய வேண்டும். 

பணி பாதுகாப்பு

மேலும் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோர் பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே குறைந்தபட்ச தினக்கூலி ஊதியத்தில் பணி அமர்த்தப்பட்டு ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, பல் மருத்துவமனை, செவிலியர் கல்லூரி போன்ற இடங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரியை தமிழக அரசின் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் சுகாதாரத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்ட நிலையில் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, பல் மருத்துவமனை, செவிலியர் கல்லூரி ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களான அமைச்சு பணியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், செவிலியர் ஆகியோரின் அடிப்படை சம்பள ஊதிய விகிதங்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் எவ்வித பாதிப்பும் நிதி இழப்பீடும் இல்லாமல் பணி பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். மேலும் நிர்வாக சீரமைப்பு குழு என்று ஒரு குழு அமைக்கப்பட்டு உதவி பதிவாளர் ஒருவரை நியமித்து ஊழியர்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story