திரேஸ்புரத்தில் சேதம் அடைந்துள்ள மீன்பிடி இறங்கு தளத்தை சீரமைக்க வேண்டும் கலெக்டரிடம், மீனவர்கள் வலியுறுத்தல்
திரேஸ்புரத்தில் சேதம் அடைந்துள்ள மீன்பிடி இறங்கு தளத்தை சீரமைக்க வேண்டும் என கலெக்டரிடம் மீனவர்கள் வலியுறுத்தினர்.
தூத்துக்குடி:
திரேஸ்புரத்தில் சேதம் அடைந்துள்ள மீன்பிடி இறங்கு தளத்தை சீரமைக்க வேண்டும் என கலெக்டரிடம் மீனவர்கள் வலியுறுத்தினர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மீன்வளத்துறை உதவி இயக்குனர்கள் விஜயராகவன், வயோலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடந்த 16 மாதங்களுக்கு பிறகு நேற்று மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்ததால், மீனவர்கள் அதிக அளவில் பங்கேற்றனர். கூட்டத்தில் மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
இழுவைப்படகு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குளங்களில் மீன் குத்தகை தொகை அதிக அளவில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனால் குத்தகை எடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அந்த தொகையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் மீன்பிடி இறங்குதளம் உடைந்து சேதம் அடைந்து இருக்கிறது. அதனை சீரமைக்க வேண்டும். தருவைகுளம் பகுதி மிகப்பெரிய மீனவ கிராமம் ஆகும். தருவைகுளம் பகுதியில் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் பாரம்பரிய மீனவர்களை பாதுகாக்க மீன்பிடி சட்டம் இயற்றப்பட்டது. அந்த சட்டத்தையும் அதனடிப்படையில் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுகளையும் முறையாக அமல்படுத்த வேண்டும். விசைப்படகுகளின் அத்துமீறலால் நாட்டுப்படகு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சினையில் மீன்வளத் துறையினர் சரிவர செயல்படாமல் உள்ளனர். அனைத்து விசைப் படகுகளையும் விதிமுறைப்படி முறையாக பதிவு செய்த பிறகே தொழிலுக்கு அனுமதிக்க வேண்டும். படகுகள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும். மீனவர்கள் கடலில் ஏதேனும் பிரச்சினையால் பாதிக்கப்படும் போது, அவர்கள் அந்தந்த மீனவ கிராமங்களின் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்து வழக்குப் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது கடலோர பாதுகாப்பு போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்வதால் மிகவும் கால தாமதமாகி வருகிறது. இதனை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு மீன்பிடி சட்டத்தில் ஏதேனும் மாற்றங்கள் கொண்டு வந்தால் பாரம்பரிய மீனவர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும்.
அனுமதி
தருவைகுளம் பகுதியில் ரூ.8 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அந்த திட்ட பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். தருவை குளத்தில் உள்ள 3 விசைப்படகுகள் சில பிரச்சினைகள் காரணமாக மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீனவர்கள் பலர் தங்கள் நகைகளை அடகு வைத்து மிகவும் ஏழ்மை நிலையில் தொழில் செய்து வருகின்றனர். கன்னியாகுமரி முதல் சென்னை வரை 100-க்கும் மேற்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இந்த மீன்பிடித் துறைமுகங்களில் பெரும்பாலும் இழுவைப்படகு மூலம் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனுமதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் தருவை குளத்தில் மட்டும் இழுவைப் படகுகளை தடை செய்வதை ஏற்க முடியாது. 3 படகுகள் மீன்பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளதால் சுமார் 100 மீனவர்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். ஆகையால் அந்த 3 மீன்பிடி படகுகளையும் மீண்டும் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும். தாமிரபரணி ஆற்றில் மழை வெள்ளம் வரும்போது புன்னக்காயல் பகுதியில் வீடுகளை மழை நீர் சூழ்ந்து மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகையால் ஆற்றிலல் இருந்து ஊருக்குள் தண்ணீர் வருவதை தடுக்கும் வகையில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.
நடவடிக்கை
பெரியதாழை கடல் பகுதியில் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த மீனவர்கள் இரவு நேரங்களில் தங்கி மீன்பிடித்து வருகின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியதாழை பகுதியில் கடற்கரை செல்லும் சாலை மிகவும் சேதம் அடைந்து உள்ளது. அதனை சீரமைக்க வேண்டும். தேசிய மீன்வள கொள்கையால் மீன்பிடித் தொழில் கார்ப்பரேட்டுகள் வசம் செல்லும் நிலை உள்ளது. அதனை நாங்கள் எதிர்க்கிறோம். இலங்கை ராணுவத்தினரால் மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி மேட்டுப்பட்டி சங்குகுழி காலனி பகுதியில் சாலை வசதி இல்லை. உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன்பிடி துறைமுகத்தில் மருத்துவ உதவி மையம் அமைக்க வேண்டும். ஆம்புலன்ஸ் வசதி, தொழிலாளர்கள் ஓய்வெடுக்க ஓய்வுக்கூடம், தொலைத்தொடர்பு வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும்.
மீனவர்கள் நல வாரியம் முறையாக செயல்படவில்லை குறிப்பாக மீனவர்களுக்கான ஓய்வூதியம் கிடைக்கவில்லை. அதனை சரி செய்ய வேண்டும். கடல்வளம் சமீபகாலமாக அழிந்து வருகிறது. பவளப்பாறை அலையாத்தி காடுகள் அழிவதால் மீன் வளம் குறைந்து வருகிறது. அதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைய உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு நடத்தப்பட வேண்டும். மீனவர்கள் காப்பீடு திட்டம் குறித்து அரசு மீனவர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பெரியதாழை உள்ளிட்ட பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
வெள்ளப் பட்டியில் இருந்து தருவைகுளம் செல்லும் வழியில் தாம்போதி உள்ளது. இதில் இருசக்கர வாகனங்கள் செல்லும் போது கடல் நீரில் மூழ்கி மீனவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகையால் அதில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும். அந்த பகுதிகளில் மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். மீன்வலை கூடத்திற்கு மின் இணைப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
விசைப்படகு
மேலும் சோழபுரத்தை சேர்ந்த பட்டதாரி வாலிபர் முத்து விநாயகம் என்பவர் பேசும்போது, நான் புதிதாக விசைப்படகு வாங்கி தொழில் செய்து வருகிறேன். ஆனால் தருவைகுளம், திரேஸ்புரம், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் ஆகிய இடங்களில் எனது படகை நிறுத்துவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இது தொடர்பாக மீன்வளத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டபோதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் எனது படகை அனாதையாக தாளமுத்து நகர் அருகே நடுக்கடலில் நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. நான் மீன் பிடிக்க செல்லும் போது அதற்கு தேவையான பொருட்களை கொண்டு செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். ஆகையால் எனது படகை ஏதேனும் ஒரு மீன்பிடி தளத்தில் நிறுத்துவதற்கு உரிய அனுமதி பெற்று தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
தூண்டில் வளைவு
மேலும் அவர் பேசும்போது, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ளது. மாவட்டத்தின் வளர்ச்சியில் மீனவர் சமுதாயம் பெரும் பங்காற்றி வருகிறது. மீனவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன். பெரியதாழையில் ரூ.25 கோடியிலும், ஆலந்தழையில் ரூ.50 கோடிசெலவிலும் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துள்ளது அடுத்த வாரம் பணிகள் தொடங்கப்படும். கீழவைப்பார் இல் ரூ 16 கோடி செலவில் தூண்டில் வளைவு நீட்டிப்பு பணிக்கு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்களின் அனைத்து குறைகளையும் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story