தூத்துக்குடி புனித அந்தோணியார் கெபி திருவிழா கொடியேற்றம் 15-ந் தேதி சப்பர பவனி


தூத்துக்குடி புனித அந்தோணியார் கெபி திருவிழா கொடியேற்றம் 15-ந் தேதி சப்பர பவனி
x
தினத்தந்தி 5 Feb 2021 5:19 PM GMT (Updated: 5 Feb 2021 5:20 PM GMT)

தூத்துக்குடி கோடி அற்புதர் புனித அந்தோணியார் கெபி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 15-ந் தேதி சப்பர பவனி நடக்கிறது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி பூபாலராயர்புரத்தில் கோடி அற்புதர் புனித அந்தோணியார் கெபி அமைந்து உள்ளது. இந்த கெபி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. புனித அந்தோணியாரின் திருக்கொடியானது புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை விசந்தி சகாய உபர்ட்டஸ் தலைமையில் மந்திரிக்கப்பட்டு பின்பு ஆலயத்தின் முன்பு உள்ள கொடிமரத்தில் அந்தோணியார் உருவம் பதித்த கொடியும் மற்றும் விவசாயிகள் நலம் பெற பச்சை வெள்ளை நிறக் கொடியையும் ஏற்றினார்.
அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில் புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என அனைவரும் கோஷங்களை எழுப்பி கைகளை தட்டி கொண்டாடினர்.
இதனை தொடர்ந்து வருகிற 13 நாட்கள் ஒவ்வொரு நாளும் மாலை 7 மணிக்கு ஜெபமாலை பிரார்த்தனை மன்றாட்டு நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்வுகளாக வருகிற 15-ந் தேதி மாலையில் புனித அந்தோணியார் திருவுருவ சப்பரப்பவனி நடக்கிறது.

புனிதரின் பெருவிழா வருகிற 16-ந் தேதி நடக்கிறது. அன்று மதியம் அசன விருந்து நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மாலை ஆண்டுப் பெருவிழா கூட்டுத்திருப்பலி புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை விசந்தி சகாய உபர்ட்டஸ் மற்றும் புனித சூசையப்பர் ஆலய உதவி பங்குத்தந்தை ஜாய்னஸ் ஆகியோர் தலைமையில் நடக்கிறது.  விழாவுக்கான ஏற்பாடுகளை புனித அந்தோணியார் கெபி கமிட்டியார் செய்து உள்ளனர்.

Next Story